நான் ஸ்டைல் கிங்னு சொன்னா அவரு ஸ்டைல் சக்கரவர்த்தி!.. யாரைச் சொல்கிறார் ரஜினி?!
நான் ஒரு சாதாரண ஆளு...பஸ் கண்டக்டர்..அதற்கு முன்னால் நான் ஒரு ஆபீஸ் பாய்...ஒரு கூலி...அதற்கு முன் கார் பெயிண்டர்...இப்போ நடிகன்...நாளைக்கு என்னவோ தெரியாது என்பார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
எங்கிட்ட இருக்குற கூட்டம் நான் சேர்த்த கூட்டம் இல்ல. அன்பால சேர்ந்த கூட்டம்...என்னது தனி சாம்ராஜ்யம்...அதை யாராலும் அழிக்க முடியாது என்பார் ரஜினி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எது பேசினாலும் அது ட்ரெண்டாகி விடுகிறது. இப்பவே இப்படின்னா...1995ல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதன் சுவாரசியம் அவர் கொடுத்த பேட்டியின் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு...
1995ல் அவர் கொடுத்த பேட்டியின் தொகுப்பு இது.
நான் ஸ்டைல் கிங்னு சொன்னா...சிவாஜி ஸ்டைல் சக்கரவர்த்தி. ஞானி...குழந்தை ...பைத்தியக்காரன்...இந்த மூணு பேரும் தான் உலகில் எப்போதும் இன்பமாக இருப்பவர்கள். ஞானி எல்லாவற்றையும் அறிந்தவர். குழந்தை எதுவுமே அறியாது. பைத்தியக்காரன் இதுவும் அறியாது. எதுவும் தெரியாது. ரெண்டுங்கெட்டான்.
குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கூறும்போது நான் திட்டமெல்லாம் வைக்க மாட்டேன். என்னோட இமேஜ், பணம், அந்தஸ்து அவங்கள பாதிக்கக்கூடாது. அவங்க வந்து அவங்க சொந்தக்கால்ல நிற்குற மாதிரி இருக்கணும். அந்த ஐடியாலஜி அவங்களுக்குள்ள இருக்கும். அதை நான் பார்த்துட்டுருக்கேன்.
என்னுடைய பலம் உண்மை. என்னுடைய பலவீனம் கோபம். அம்மா, தெய்வம் இருவரில் அம்மாவுக்குத் தான் முக்கியத்துவம் தருவேன். காந்தியடிகள் உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி என்கிறார்.
அடுத்த பிறவியில் யாராக பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் இந்தப் பிறவி தான் கடைசி பிறவியாக்க முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அடுத்த பிறவி வேண்டாம் என்கிறார். ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒப்பிடக்கூடாது.
ரெண்டுமே பாம்பும், கீறியும் மாதிரி. ஆப்போசிட் டைரக்ஷன். ஒப்பிட முடியாது. எளிமை அடக்கம் பணிவு யாரிடமிருந்து இந்தத் தாரக மந்திரத்தைக் கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு சிவாஜி ராவிடமிருந்து என்று எளிமையாக பதில் சொல்கிறார் ரஜினி.
வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்க என்னை நேசிக்கிறது என் உள்ளத்தைன்னு எனக்கு நல்லா தெரியும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற புரட்சி கவி பாரதி. தன்னைத்தான் நாத்திகவாதி என்று அழைத்துக் கொண்ட ஆன்மிகவாதி பெரியார்.
உண்மையான படிக்காத மேதை காமராஜர். மாபெரும் தலைவர் அண்ணா. நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையைக் கொண்டு வந்தவர் எம்ஜிஆர். ஜெயலலிதாவிடம் பிடித்த குணம் அவங்களோட தன்னம்பிக்கை என்றார்.
அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது...ஆண்டியாய் சுற்றுவது எதில் இன்பம் என்ற கேள்விக்கு...நான் ஒண்ணைத் தான் பார்த்துருக்கேன். இன்னொன்னைப் பார்க்கல. ஒருவேளை அதையும் பார்த்தா அதுக்கு அப்புறம் எதுல இன்பம்னு சொல்றேன்.
தன்னைத் தான் உணரும்போது தான் மனிதன் மகான் ஆகிறான் என்றார். கொஞ்சம் சாப்பாடு. கொஞ்சம் தூக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கும் மேல ஒவ்வொருத்தரோட உடல் அமைப்பு.
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று அரசியல்வாதிகள் பேசியதைப் பற்றி என்ன சொல்றீங்க என்ற கேள்விக்கு தமிழ் பேசுறவங்க எல்லாருமே தமிழர்கள் தான் என்றார்.
அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்பதில் நம்பிக்கை இல்லை. அவங்கவங்க செய்த புண்ணியம் அவங்க அவங்களைத் தான் போய்ச் சேரும்.