சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் டாப் டக்கர் டபுள் டமாக்கா படங்கள்...! - ஒரு பார்வை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவை எல்லாம் சூப்பர்ஹிட். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
ஜானி
இந்தப்படத்தில் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடம் ஏற்று நடித்து இருந்தார்.
மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி, தீபா ஆகியோர் நடித்து இருந்தனர். என் வானிலே ஒரே வெண்ணிலா பாடல் எவர்க்ரீன் சாங்காக இன்று வரை உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான காதல் காவியம். என் வானிலே, காற்றில் எந்தன் கீதம், ஆசைய காத்துல, சென்யுரீடா, ஒரு இனிய மனது ஆகிய மனது மறக்காத பாடல்கள் உள்ளன.
தில்லுமுல்லு
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் தில்லு முல்லு. இந்திரன், சந்திரன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருப்பார் ரஜினிகாந்த்.
தேங்காய் சீனிவாசன், மாதவி, சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழியும். ரஜினிகாந்துக்கு இவ்ளோ நகைச்சுவை உணர்வு உண்டா என்ற ஆச்சரியம் இந்தப்படத்தைப் பார்த்தால் வந்துவிடும். ராகங்கள் பதினாறு, தங்கங்களே தம்பிகளே, தில்லு முல்லு தில்லு முல்லு ஆகிய பாடல்கள் உள்ளன.
அருணாச்சலம்
சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஒரு ஜனரஞ்சகமானது. அருணாச்சலமாகவும், வேதாச்சலமாகவும் வந்து ரஜினிகாந்த் நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடுவார்.
துவக்கத்தில் தான் ஒரு அனாதை என நினைக்கும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வேதாச்சலம் என்ற கோடீஸ்வரரின் மகன் தான் இந்த அருணாச்சலம் என தெரியவரும்போது படத்தின் வேகம் அதிகரிக்கிறது.
ரஜினிக்கு ஜோடியாக மனது மறக்காத சூப்பரான நடிகை சௌந்தர்யா நடித்து இருப்பார். இவர் தற்போது நம்மிடையே இல்லாதது திரையுலகிற்கு ஒரு இழப்பு தான். அதான்டா இதான்டா, நகுமோ, தலைமகனே, மாத்தாடு மாத்தாடு, சிங்கம் ஒன்று, தலைமகளே ஆகிய பாடல்கள் உள்ளன.
முத்து
ரஜினிகாந்த் நடித்த அசத்தலான படம் முத்து. ஜப்பான் வரையில் இந்தப்படம் பேரு வாங்கிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் ஜமீன்தாராகவும், அவரது மகனாகவும் ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்து இருந்தார்.
ரகுவரன் வில்லனாக நடித்தார். இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடி மீனா. சரத்பாபு நடித்து இருந்தார். படத்தில் பல காட்சிகளில் ரஜினிகாந்த்தின் நகைச்சுவை சூப்பராக இருக்கும். குலுவாலிலே, ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா, கொக்கு சைவ கொக்கு, விடுகதையா...ஆகிய எவர்க்ரீன் பாடல்கள் உள்ளன.
அதிசயப்பிறவி
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏ.பூர்ணசந்திரராவ் தயாரிப்பில் வெளியான படம் அதிசயப்பிறவி. முதல் பாதியில் ரஜினிகாந்த் ஒரு அப்பாவி கேரக்டரில் வருவார். அடுத்த பாதியில் அவர் ஒரு விவரம் தெரிந்தவராக மாறி விடுகிறார்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். அன்னக்கிளியே, இதழ்சிந்தும், பாட்டுக்கு பாட்டு, சிங்காரி பியாரி, உன்ன பார்த்த நேரம், தான தனம் ஆகிய பாடல்கள் உள்ளன.
ராஜாதி ராஜா
சின்னராசு, ராஜா என இரு கதாபாத்திரங்களில் நடித்து ரஜினி எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படத்தை நினைவு படுத்தியிருப்பார். ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளியான ஒரு கமர்ஷியல் படம். ராதா அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
மீனம்மா மீனம்மா, மாமா உன் பொண்ணக் கொடு, மலையாளக்கரையோரம், எங்கிட்ட மோதாதே, உன் நெஞ்ச தொட்டு சொல்லு, வாவா மஞ்சள் மலரே...ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
தர்மத்தின் தலைவன்
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த மற்றும் ஒரு சூப்பர்ஹிட் படம் இது. ரஜினிகாந்துடன் சுஹாசினி, பிரபு, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. முத்தமிழ் கவியே வருக, ஒத்தடி ஒத்தடி, தென்மதுரை வைகை நதி, யாரு யாரு இந்த கிழவன் யாரு, வெள்ளி மணி கிண்ணத்திலே ஆகிய பாடல்கள் உள்ளன.
போக்கிரி ராஜா
1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சூப்பர்ஹிட்டானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. கடவுள் படைச்சான், போக்கிரிக்கி போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லி ஆகிய பாடல்கள் உள்ளன.
நெற்றிக்கண்
தந்தை, மகன் என முற்றிலும் மாறுபட்ட இருவேறு வேடங்களில் நடித்து படத்தின் வெற்றிக்கு வழி வகுத்திருப்பார் ரஜினிகாந்த். லட்சுமி, சரிதா ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்து இருப்பார்கள்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் படம் சக்கை போடு போட்டது. இந்தப்படத்தில் ஒரு ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் அநாயசமாக நடித்து இருப்பார். மாப்பிள்ளைக்கு, ராஜா ராணி, ராமனின் மோகனம், தீராத ஆகிய பாடல்கள் உள்ளன.
எந்திரன்
இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான படம் எந்திரன். இதில் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோட்டாகவும் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். படம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை அசர வைத்துவிடும். வசீகரன் என்ற பெயரில் விஞ்ஞானியாக வரும் ரஜினியின் லுக் செமயாக இருக்கும். அதேபோல் சிட்டி என்ற பெயரில் ரோபோட்டாக வந்து ரஜினிகாந்த் மிரட்டியிருப்பார். புதிய மனிதா, காதல் அணுக்கள், இரும்பிலே ஒரு இதயம், அரிமா அரிமா, கிளிமஞ்சாரோ, பூம் பூம் ரோபோ டா ஆகிய பாடல்கள் உள்ளன.