இந்திப்படவுலகையே மிரள வைத்த சூப்பர்ஸ்டாரின் படம்...இப்படி ஒரு படம் அங்கு வந்ததில்லை..!
ஸ்டைலு ஸ்டைலுதான்...சூப்பர் ஸ்டைலுதான்...என்ற பாடலிலும், சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடலையும் கேட்டாலே போதும்.
ரஜினிகாந்த்தைப் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர் தமிழ்ப்படங்களில் தான் நடித்தது பலருக்கும் தெரியும். இந்திப்படங்களிலும் நடித்து பெயர் வாங்கினார். இதற்கும் ஆர்வமூட்டியவர் யார் என்றால் நண்பர் கமல் தான்.
ஒரு தமிழ் நடிகர் இந்தியில் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்று சொன்னதே கமல் தான். ரஜினிகாந்த் இந்திப்படங்களில் நுழைய அடித்தளமாக அமைந்தது கமலின் ஏக் துஜே கேலியே.
ரஜினி முதலில் நடித்த இந்திப்படம் அந்தாகானூன். அமிதாப்பச்சன், ஹேமமாலினி உடன் ரஜினி நடித்தார். அங்கு அமிதாப் தான் உச்ச நட்சத்திரம். இருந்தாலும் இந்திப்படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரைக் கொடுத்தார்.
தமிழில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் தான் இந்தியில் ரீமேக்காகி அந்தாகானூன் ஆனது. ரஜினிகாந்த் பெங்களூர்க்காரர் என்பதால் இந்தப்படத்தில் சரளமாக இந்தி பேசினார்.
தொடர்ந்து மேரி அதாலத் என்ற இந்திப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து அசத்தினார். இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்தது.
பின்னர் ஜீத் ஹமாரி என்ற படத்தில் நடித்தார். தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் படம் இந்தியில் ரீமேக்காகி கங்குவா என்ற பெயரில் வெளியானது.
இந்தப்படத்தில் ரஜினியின் நடிப்பு அனைத்துத் தரப்பினராலும் பேசப்பட்டது. கன்னட நடிகர் துவாரகீஷ் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக எடுத்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து ராஜேஷ் கன்னாவுடன் ரஜினி இணைந்து நடித்தார். அந்தப்படத்தின் பெயர் பேவஃபாயி. படம் பரவாயில்லாமல் ஓடியது.
இந்தியில் ரஜினி நடித்த ஆறாவது படம் ஜான் ஜானி ஜனார்த்தன். இது ரஜினிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. தமிழில் வெளியான மூன்று முகம் படத்தின் டப்பிங் தான் இது.
இதற்கு முன்னர் திலீப்குமார், அமிதாப்பச்சன், சஞ்சீவ் குமார் ஆகியோர் தான் இந்தியில் 3 வேடங்களில் நடித்து இருந்தனர். ஆனால் அந்தப் படங்களுக்கு எல்லாம் அவ்வளவு வரவேற்பு இல்லை. ரஜினியின் படம் தான் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.