உலகத்திலேயே இங்குதான் முதல் முறை.. கடுப்பான மாநாடு பட தயாரிப்பாளர்.....

சிம்பு என்றாலே பஞ்சாயத்திற்கு குறைவு இருக்காது. அதற்கு காரணம் அவரின் கடந்த கால நடவடிக்கைகள்தான். படப்பிடிப்புகளுக்கு சரியாக செல்லாதது, திடீரென சம்பளத்தை உயர்த்தி கேட்பது, டப்பிங் பேச செல்லாதது என தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுப்பவர். அதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்வினை ஆற்றினால் தனக்கு எல்லோரும் பிரச்சனை கொடுக்கிறார்கள் என மேடைகளில் புலம்புவதை வழக்கமாக கொண்டிருப்பவர் சிம்பு.
அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தோல்வி படமாக அமைந்தது. அதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பல கோடி நஷ்டம். சிம்பு தற்போது தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வந்தாலும், இந்த பிரச்சனை சிம்புவை பல வருடங்களாக துரத்தி வருகிறது. அவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அது பஞ்சாயத்தில் வந்து முடிகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாநாடு பட ரிலீஸுக்கும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. சமீபத்தில் மாநாடு விழாவில் பேசிய சிம்பு ‘ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கண்ணீர் மல்க பேசினார்.
இந்நிலையில், மால்கள், மார்க்கெட் , தியேட்டர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இது மாநாடு பட வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.