சின்ன பட்ஜெட்டில் உருவாகும் சின்ன திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை இப்போதும் நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருக்கிறது. இதில் தனி தியேட்டர்கள் மட்டுமில்லாமல் பிவிஆர் போன்ற மல்டி காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் இருக்கிறது. அதாவது மால்களில் சென்று படம் பார்ப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கடந்த பல வருடங்களாகவே பெரிய நடிகர், பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு மட்டுமே தியேட்டர் அதிபர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அறிமுக இயக்குனர் இயக்கி, அறிமுக நடிகர் நடித்து வெளியாகும் சின்ன படங்களுக்கு அவர்கள் தியேட்டரே கொடுப்பதில்லை. மேலும், சில படங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் நடித்துள்ள படங்களுக்கு கூட தியேட்டர்கள் கொடுப்பதில்லை என்கிற புகார் திரையுலகில் இப்போதும் இருக்கிறது.
இந்நிலையில்தான் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் சல்லியர்கள் என்கிற சின்ன பட்ஜெட் படம் இன்று தமிழ்நாட்டில் வெளியாகவில்லை
. இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘பி.வி.ஆர் திரையரங்குக்கு தமிழ்நாட்டில் 150 தியேட்டர்கள் இருக்கிறது. ஆனால், இந்த படத்திற்கு ஒரு காட்சி கூட கொடுக்க முடியது என்கிறார்கள். கேட்டால் படம் ஓடாது என்கிறார்கள்.

படம் ஓடாது என இவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்? படத்தை தியேட்டரில் போடுங்கள்.. மக்கள் பார்க்கவில்லை என்றால் தூக்கிக் விடுங்கள்.. ஆனால் தியேட்டரில் போடாமலேயே படம் ஓடாது என ஏன் சொல்கிறார்கள்? எல்லோரும் தொழில் செய்யவே வந்திருக்கிறோம்.. இப்படி எல்லாம் செய்தால் நாசமாய் போய்விடுவீர்கள்.. சினிமா தொழில் நாசமாகி போய்விடும்’ என்று கோபமாக பேசியிருக்கிறார்.
சல்லியர்கள் திரைப்படம் இலங்கையில் போர் நடந்தபோது நடக்கும் சம்பவங்களை அடிப்பையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை வெளியிடும் உரிமையை சுரேஷ் கமாட்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது..
