Suriya 45: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. நந்தா, பிதா மகன், காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஹரி இயக்கத்தில் சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்து பக்கா ஆக்சன் ஹீரோவாகவும் மாறினார்.

அதேபோல், சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து காட்டினார். இந்த இரண்டு படங்களுமே சூர்யாவின் இமேஜை மேலே கொண்டு போனது. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார்.

சுமார் 2 வருடங்கள் இந்த படத்திற்காக உழைப்பை போட்டார் சூர்யா. ஆனால், இந்த படம் சமீபத்தில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதுவரை எந்த ஒரு படத்திற்கு இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதில், பெரும்பாலும் சூர்யாவின் மீது வன்மத்தை காட்டியதாகவே தெரிந்தது.

கங்குவா படம் முடிவடையும் நேரத்தில் மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். அது 1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதையாகும். கர்ணன் என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவிருந்ததால் இப்போது இந்த படத்தில் நடித்தால் பாலிவுட்டில் நமக்கு எதிர்ப்பு வரும் என்று கருதிய சூர்யா புறநானூறு படத்தில் நடிக்கவில்லை.

எனவே, அந்த வாய்ப்பு இப்போது சிவகார்த்திகேயனுக்கு சென்றுவிட்டது. ஒருபக்கம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் பூஜை இன்று கோவையில் நடைபெற்றது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

