வணங்கானை பாதியிலேயே விட்டுவிட்ட சூர்யா… உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “வணங்கான்”. இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
சமீபத்தில் சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் ஆதலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவியது. ஆனால் சூர்யா தரப்பு இதனை மறுத்தது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் பாலாவுடன் இருப்பது போல ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார் சூர்யா.
இதனிடையே சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. மேலும் சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளிவந்தது. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகிறது.
“வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும்போதே சிவா திரைப்படத்திற்கும் ஒப்புக்கொண்டார் சூர்யா. மேலும் தற்போது சிவா இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் சூர்யா கலந்துகொண்டும் வருகிறார்.
இதனால் “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது? என பல கேள்விகள் எழுந்தது. இதனிடையே பாலா இதுவரை இயக்கிய காட்சிகள் எல்லாம் சரிவர அமையவில்லை என்பதால் “வணங்கான்” திரைப்படத்தை முதலில் இருந்து இயக்குகிறார் எனவும் சில பேச்சுக்கள் அடிபட்டது.
இந்த நிலையில் தற்போது “வணங்கான்” திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்றை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதாவது பாலா “வணங்கான்” திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுதாக முடிக்கவில்லையாம். ஆதலால் சூர்யா பாலாவிடம் “முழு ஸ்கிரிப்ட்டையும் முடித்துவிட்டு வாருங்கள். அதன் பின்பு நாம் படப்பிடிப்பை தொடங்கலாம்” என கூறிவிட்டாராம். ஆதலால் தான் தற்போது சிவா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் சூர்யா.
பாலா இயக்கத்தில் உருவான “நந்தா” திரைப்படம் சூர்யாவின் கேரியரிலேயே மிகவும் திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. அதில் இருந்து பாலாவும் சூர்யாவும் மிகவும் நட்போடு பழகி வருகின்றனர். ஆனால் “வணங்கான்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியதில் இருந்தே சூர்யா-பாலா கூட்டணி குறித்து அதிருப்தியான செய்திகளே வெளிவந்துகொண்டிருக்கிறது. எனினும் பாலா “வணங்கான்” திரைப்படத்தை சிறப்பாக முடித்துக்கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.