50 வருஷம் கழிச்சி நடக்கும் கதை....ஹாலிவுட் பாணி சயின்ஸ் பிக்ஷன் கதையில் சூர்யா...
ஹாலிவுட்டில் மட்டுமே அதிக சயின்ஸ் பிக்ஷன் கதையில் திரைப்படங்கள் உருவாகும். இந்திய சினிமாவை பொறுத்தவரை சயின்ஸ் பிக்ஷன் கதையில் அரிதாகத்தான் திரைப்படங்கள் உருவாகிறது. அவ்வப்போது பாலிவுட்டில் சில படங்கள் வெளியாகும்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள் மிகவும் குறைவு. ஆனால், சமீபகாலமாக நடிகர்கள் சயின்ஸ் பிக்சன் கதைகளில் நடிக்க துவங்கியுள்ளனர். இதற்கு பிள்ளையார் சுழிபோட்டவர் நேற்று இன்று நாளை பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார்தான்.
அந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்க அவரின் இயக்கதில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க விரும்பினார். அதன் விளைவுதான் அயலான் ‘திரைப்படம்’. ஆனால், இப்படத்தை 4 வருடங்களாக எடுத்து வருகிறார்கள். இன்னும் முடிந்த பாடில்லை. படப்பிடிப்பை விட ஃபிரி புரடெக்ஷன் மற்றும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளே அதிகம் என்பதால் இந்த காலம் பிடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், அதே ஆர்.ரவிக்குமார் சூர்யாவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். சூர்யா ஏற்கனவே 24 என்கிற சயின்ஸ் பிக்ஷன் கதையில் நடித்திருந்தார். ஆனால், ரவிக்குமார் உருவாக்கியுள்ளது இன்னும் 50 வருடம் கழித்து நடக்கும் கதையாகும். ஹாலிவுட் படங்களின் பாணியில் இப்படம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு ஒரு வருடம் இந்த படத்திற்கான பணிகளை ரவிக்குமார் செய்யவுள்ளாராம்.
இப்படியே போனால் 5 வருடத்திற்கு ஒரு படத்தைத்தான் ஆர்.ரவிக்குமார் இயக்குவார் போல என கிண்டலாக தோன்றினாலும், இப்படி படம் எடுக்கவும் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் வேண்டும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.