மகிழ்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினர்..... காரணம் என்ன தெரியுமா?
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருந்த படம் தான் ஜெய்பீம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டை பெற்ற இப்படம் தற்போது வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இன்னும் தீர்ந்தபாடில்லை.
படம் வெளியான நாள் முதல் தற்போது வரை பல பிரச்சனைகளை சந்தித்த சூர்யாவிற்கு மிரட்டல்களும் வந்தது. ஜெய்பீம் படம் எந்த அளவிற்கு பாராட்டை பெற்றதோ அதைவிட அதிகமாக விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் படக்குழுவினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.
அதாவது ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகியுள்ளதாம். சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள விருது தான் கோல்டன் குளோப் விருது. இந்த விருதை பெரும் பெரும்பாலான படங்கள் ஆஸ்கர் விருதை பெறும் என்பார்கள்.
தற்போது 2022ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 9 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம் பிடித்துள்ளது. படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் விருது பட்டியலில் இடம் பிடித்துள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருளர் இன மக்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் ஜெய்பீம்
படம். இப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்து விட்டதாக கூறி ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அரசியல் தலையீடுகளை சந்தித்த ஜெய்பீம் படம் தற்போது உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.