இப்படி ஒரு கொடுமை நடந்திருக்க கூடாது... நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சூர்யா....!
சமீபகாலமாக தனது படங்கள் மூலம் சாமானிய மக்களின் பிரச்னைகளை பேசி வருபவர் தான் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் சாமானிய மக்களின் வலியை மக்களுக்கு உணர்த்தும் விதமாக இருந்தது.
அதேபோல் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு குரல் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை ஒருவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள நடிகையான பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவரை வழிமறித்து கடத்தி சென்ற ஒரு கும்பல், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது இத்தனை ஆண்டுகள் கடந்தபோதும் இன்னும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் கேரளா சென்ற நடிகர் சூர்யா, நடிகை பாவனா கடத்தல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது" என கூறியுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.