டி.ராஜேந்தர் நடிகராவதற்கு காரணமாக இருந்த ரஜினிகாந்த்… இது என்னப்பா புது கதையா இருக்கு!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்த டி.ராஜேந்தர் குறித்து அறியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று கூறலாம். தனது ரைமிங் வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த டி.ராஜேந்தர் இயக்கிய முதல் திரைப்படம் “வசந்த அழைப்புகள்”.
ஆனால் அவர் உண்மையில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் “ஒரு தலை ராகம்”தான். ஆனால் அத்திரைப்படத்தின் டைட்டிலில் இயக்குனருக்கு கீழ் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் “ஊயிருள்ளவரை உஷா”. இதில் டி.ராஜேந்தருடன் சரிதா, கங்கா, நளினி என பலரும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது “உயிருள்ளவரை உஷா” திரைப்படத்திற்கு முதலில் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் டி.ராஜேந்தர் விரும்பினாராம். மேலும் இது குறித்து ரஜினிகாந்த்தை அணுகியபோது அவரும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஏதோ காரணத்தால் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்தால் நடிக்க முடியவில்லையாம்.
அதன் பிறகுதான் டி.ராஜேந்தர் அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் பேசும் வசனங்கள் எல்லாம் ரஜினிகாந்த்தின் சாயலிலேயே இருக்குமாம். அது ரஜினிகாந்த்துக்காக எழுதப்பட்ட வசனங்கள் என்பதால்தான் அவ்வாறு இருந்ததாக சித்ரா லட்சுமணன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
“உயிருள்ளவரை உஷா” திரைப்படத்திற்கு முன்பு டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படங்களில் அவர் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார். “உயிருள்ளவரை உஷா” திரைப்படத்தில்தான் டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.