நடு இரவில் டி.ராஜேந்திரனை தட்டி எழுப்பி கதை கேட்க வைத்த சிம்பு… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா!!
கடந்த 2002 ஆம் ஆண்டு மம்மூட்டி, ஹம்சவர்தன், ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜூனியர் சீனியர்”. இத்திரைப்படத்தை ஜெ.சுரேஷ் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு இதில் இரண்டு கதாநாயகர்கள் நடிப்பது போல் கதை எழுதியிருந்த இயக்குனர் ஜெ.சுரேஷ், இந்த கதையை மம்மூட்டியிடம் கூறினார். மம்மூட்டிக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போக அவர் நடிப்பதாக ஒப்பந்தமானது. அதன் பின் இரண்டாவது கதாநாயகனாக லாரன்ஸ் ராகவேந்திரா முதலில் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் லாரன்ஸால் அதில் நடிக்கமுடியவில்லை.
இயக்குனர் ஜெ.சுரேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் சிலம்பரசன். தனது நண்பரான ஜெ.சுரேஷ், மம்மூட்டியை வைத்து படம் எடுக்கப்போகிறார் எனவும், அதில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்க உள்ளார்கள் எனவும் தெரிய வந்தபோது, சிம்பு அதில் இரண்டாவது கதாநாயகனாக தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதனை ஜெ.சுரேஷிடமும் கூறியிருக்கிறார் சிம்பு. சுரேஷும் சரி என்று ஒப்புக்கொள்ள, அவரை தனது அப்பாவிடம் ஒப்புதல் வாங்குவதற்காக நடுராத்திரியில் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சிம்பு.
சுரேஷை கீழே அமரவைத்துவிட்டு, மேல் அறைக்குச் சென்ற சிம்பு, அங்கே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த டி.ராஜேந்தரை எழுப்பி கீழே வந்து கதை கேட்குமாறு கூறியிருக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டார்களே என்ற எந்த கோபமும் இல்லாமல் கீழே இறங்கி வந்தாராம் டி.ஆர்.
ஆனால் இவரை இப்படி நடுராத்திரியில் தொந்தரவு கொடுக்கிறோமே என்று ஜெ.சுரேஷ் சங்கடப்பட்டாராம். ஆனால் சிம்புதான் மிகவும் அவசர அவசரமாக அந்த நடுராத்தியில் அவரை அழைத்து வந்திருக்கிறார். ஜெ.சுரேஷ் “நான் காலையில் வருகிறேன். நள்ளிரவு ஆகிவிட்டது” என கூறியும் சிம்பு விடாபிடியாக அழைத்து வந்திருக்கிறார்.
டி.ராஜேந்தரிடம் தான் மம்மூட்டியை வைத்து படம் இயக்கப்போவதாகவும் அதில் இரண்டாவது கதாநாயகனாக சிம்பு நடிக்க ஆசைப்படுகிறார் எனவும் ஜெ.சுரேஷ் கூறியிருக்கிறார். மேலும் அத்திரைப்படத்தின் கதையையும் கூறியிருக்கிறார். அதனை கேட்டுக்கொண்டிருந்த டி.ராஜேந்தர் “எவ்வளவு ரூபாய்க்கு பப்ளிசிட்டி பண்ணுவீங்க?” என கேட்டாராம்.
அதற்கு ஜெ.சுரேஷ் “இந்த படத்துக்கு என்ன பட்ஜெட் இருக்கோ, அதற்கேற்றார் போல் பப்ளிசிட்டி செய்வோம்” என கூறியிருக்கிறார். அதற்கு டி.ராஜேந்தர் “நான் ரெண்டு கோடி போட்டு சிம்புவுக்கு மட்டுமே பப்ளிசிட்டி பண்ணுவேன். உங்களால பண்ணமுடியுமா?” என கேட்டிருக்கிறார்.
“இல்லை சார், அவ்வளவு ரூபாய்க்கு எங்களால பண்ணமுடியாது” என சுரேஷ் கூறியிருக்கிறார். “அப்போ விட்ருங்க, சரியா வராது” என கூறிவிட்டு மேலே தனது அறைக்குத் தூங்கச்சென்றுவிட்டாராம் டி.ராஜேந்தர். அதன் பிறகுதான் அதில் இரண்டாவது கதாநாயகனாக ரவிச்சந்திரனின் மகனான ஹம்சவர்தன் நடித்திருக்கிறார்.