டி.ராஜேந்தர் தாடிக்கு பின்னால் இருக்கும் சோகக் கதை… இப்படி ஒரு பின்னணியா??
தமிழின் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்த டி.ராஜேந்தர், “ஒரு தலை ராகம்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். மேலும் அத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியவரும் அத்திரைப்படத்திற்கு இசையமைத்தவரும் டி.ராஜேந்தர்தான்.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பல திரைப்படங்களுக்கு அவரே இசையமைக்கத் தொடங்கினார். அதுமட்டுமல்லாது தனது திரைப்படங்களில் ஒளிப்பதிவு பணியையும் அவரே ஏற்றுக்கொண்டார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என ஒரு திரைப்படத்தின் முக்கிய பங்குகளை அவரே வகித்து வந்தார்.
டி.ராஜேந்தர் நடித்து இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் அண்ணன்-தங்கை பாசம் மிகவும் பிரதானமான ஒன்றாக இருக்கும். “தங்கைக்கோர் கீதம்”, “என் தங்கை கல்யாணி”, “தாய் தங்கை பாசம்” போன்ற திரைப்படங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். மேலும் “மைதிலி என்னை காதலி”, “சொன்னால்தான் காதலா”, “மோனிஷா என் மோனலிஷா” போன்ற பல காதல் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
டி.ராஜேந்தர் என்றாலே ரைமிங் வசனங்களுக்கு அடுத்ததாக ரசிகர்களுக்கு நினைவில் வருவது அவரது தாடிதான். இந்த நிலையில் டி.ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் சோகக் கதை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
டி.ராஜேந்தர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவராம். ஆதலால் அவரது வீட்டில் மின்சார வசதி கிடையாது. ஆனாலும் நன்றாக படித்து பி.ஏ படிப்பில் முதல் வகுப்பில் முதன்மையாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றிருக்கிறார்.
டி.ராஜேந்தர் இளம்வயதில் மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டில் இருக்கும் சிம்னி விளக்கில்தான் சவரம் செய்வாராம். ஆதலால் அடிக்கடி பிளேடு முகத்தில் கீறிவிடுமாம். இந்த காரணத்தால் அவர் தாடி வைக்கத் தொடங்கிவிட்டாராம். டி.ராஜேந்தரின் அடையாளமாக மாறிப்போன தாடிக்கு இப்படி ஒரு சோகக்கதையா!!