விஜயகாந்த் இப்படி ஆனதற்கு அது மட்டுமே காரணம்!.. அடித்து சொல்லும் சினிமா பிரபலம்....

by சிவா |   ( Updated:2022-03-14 09:48:54  )
vijayakanth
X

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அரசியலும் கால் பதித்தவர். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். ஆனால், அவரின் முன் கோபம் காரணத்தால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர். மேலும் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

vijayakanth

விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் சரியாக பேச முடியவில்லை மற்றும் மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியாத நிலையில் இருக்கிறார். இப்படி இருக்க அவர் எப்படி நடிப்பார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களை வைத்தே அவர் எப்படி இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வருகிறது. சமீபத்தில் அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி எல்லோரையும் அதிர வைத்தது. ‘விஜயகாந்தா இப்படி மாறிவிட்டார்?’ என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், விஜயகாந்துக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தவரும், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என பல முகங்களை உடைய டி.சிவா சமீபத்தில் ஒரு யுடியுப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

விஜயகாந்த் மிகவும் நல்லவர். பிறருக்கு உதவும் குணம் உடையவர். அவர் சினிமாவில் மட்டுமே இருந்திருந்தால் அவரின் உடல் நிலை நன்றாகவே இருந்திருக்கும். அரசியலால்தான் அவரின் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டது. அவர் பொதுவாக கோபப்படும் குணம் உடையவர். பொது இடங்கள், பிரச்சாரங்களின் போதெல்லாம் அவர் கோபப்பட்டது அவரின் உண்மையான குணமே தவிர அவர் மதுபோதையில் செய்தது இல்லை.

இன்னும் சொல்லப்போனால் அப்படி பலரும் அவரை விமர்சித்த நேரத்தில் அவர் குடிப்பதையே நிறுத்திவிட்டார். பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். அவர் நடிக்கும் படம் தோல்வி அடைந்தாலும் சரி வெற்றி அடைந்தாலும் சரி தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டார். மிகவும் கூலாக இருப்பார்.

ஆனால், அரசியலில் அவர் சந்தித்த பிரச்சனைகள், நம்பிக்கை துரோகங்கள் இவைகளால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் அவரால் தாங்க முடியாமல் அவரின் உடல் நிலை பாதித்தது என்றுதான் நம் நம்புகிறேன். மற்றபடி அவரின் குடிப்பழக்கம் அவரை இப்படி ஆக்கியது என்பதில் கொஞ்சமும் உண்மையில்லை’ என அவர் கூறினார்.

siva

டி.சிவா விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். விஜயகாந்தை வைத்து மரியாதை படத்தை தயாரித்தவர். மேலும், சரோஜா, கனிமொழி, அரவாண், அரவிந்தன், கடவுள் இருக்கான் குமாரு, சார்லி சாப்ளின் 2, பார்ட்டி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், பல திரைப்படங்களில் இவர் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story