'அரைச்ச மாவை அரைப்போமா'.. தமிழ் சினிமாவில் இதுதான் காலம் காலமா வருது.. அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?

by ராம் சுதன் |   ( Updated:2024-05-25 07:38:20  )
Tamil cinema
X

Tamil cinema

தமிழ் சினிமா உலகில் கதைக்குத் தான் பஞ்சம் என்று பழைய படங்களின் கதைகளை எடுத்து ஒவ்வொன்றாக சுட்டுப் போடுகிறார்கள். இப்போது காட்சிக்கும் பஞ்சம் வந்து விட்டது. இது உண்மை என்பது போல பிரபல எழுத்தாளர் சுஜாதா ஒரு சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.

ரோஜா, இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், ஜீன்ஸ், வரலாறு, கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ் போன்ற படங்களில் இவர் தான் வசனகர்த்தா. அதே போல விக்ரம், ப்ரியா, காயத்ரி போன்ற படங்கள் இவரது கதையில் இருந்து தான் உருவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...

Writer Sujatha

Writer Sujatha

ஹீரோ வில்லனிடம் செமத்தியா அடி வாங்குவார். ஆனால் அவருக்குக் கொஞ்சம் கூட வலிக்காது.
அதே நேரம் ஹீரோயின் பஞ்சால் ஒத்தடம் கொடுத்தால் போதும். 'ஸ்... ஆ...' என பாவலா பண்ணுவார். ஒரு பெரிய கட்டடம் இருக்கும். அதில் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை யாராவது உடைத்துக் கொண்டு போய் விழுவார்கள்.

இரவு நேரத்தில் எல்லா லைட்டையும் அணைத்ததும் வீடு முழுவதும் ஊதா கலரில் தெரியும். பார்த்து இருப்பீர்களே. அது தான் தமிழ் சினிமா. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவது உறுதி. அதே போல வில்லன் ஹீரொவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ அவ்வளவு சீக்கிரத்தில் கொன்று விட மாட்டார். ஹீரோ தப்பிக்க 30 நிமிடமாவது இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அதன்பிறகு தான் சுற்றி வளைத்துக் கொல்ல முயற்சிப்பார்.

இரட்டை வேடப் படங்கள் என்றால் ஒருவர் நல்லவர். இன்னொருவர் கெட்டவர் தான். பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம். ஆனால் அது வெடிக்காது. எத்தனை பேர் வந்தாலும் ஹீரோ ஒத்தை ஆளாக நின்று சமாளிப்பார். அப்போது ஒருவர் ஒருவராகத் தான் வந்து அவரிடம் உதை வாங்குவார்கள்.

இதையும் படிங்க... பாக்கியராஜ், அஜீத்தை விட ராமராஜன் ஒரு படி மேல… பிரபலம் சொல்றது இதுதான்..!

உணர்ச்சி வசப்பட்டு அழும் காட்சிகள் என்றால் திடீரென மின்னல் வெட்டும். இடி இடிக்கும். மழை கொட்டித் தீர்த்து விடும். பாடல் காட்சிகளில் ஒரு வரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அதற்கு அடுத்த வரி மலேசியாவிலும் கொண்டு போய் காட்டுவார்கள்.

கல்யாண காட்சியில் தாலி கட்டப்போகும் போது கரெக்டா வந்து 'நிறுத்துங்க'ன்னு ஒரு குரல் கட்டாயமாக ஒலிக்கும். அதே மாதிரி முகூர்த்தத்துக்கு நேரமாறது. பொண்ண வரச்சொல்லுங்கோன்னு சாஸ்திரிகள் சொல்லிட்டாருன்னா பெண் காணாமல் போய்விட்டாள்னு அர்த்தம்.

ஹீரோ, ஹீரோயின் ரோட்டில் நடனமாடிவிட்டால், அங்கு போகும் எல்லாருமே அதே தாளத்துக்கு நடனமாடி விடுவார்கள். போலீஸ் உயர் அதிகாரி நல்லவராக இருப்பார். ஆனால் அவருக்குக் கீழே உள்ள போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக போட்டுக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதே நேரம் உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்களாகி விடுவர்.

ஒரே பாடலுக்கு ஹீரோ, ஹீரோயின் டிரஸ் மாறிக்கொண்டே இருக்கும். படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால், 'யாரோ செத்து விட்டார்கள்' என்று அர்த்தம். கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த நிலையிலும் போய் சாட்சி சொல்லலாம். ஏன் கோர்ட் வாசல்படியில் நின்று கூட சாட்சி சொல்லலாம்.

ஹீரோ ஏழையாகவும், ஹீரோயின் பணக்காரியாகவும் இருப்பார்கள். அதே நேரம் ஹீரோயின் ஏழைன்னா ஹீரோ பணக்காரனாக இருப்பான். சினிமா காதலே அப்படித்தான் வருது. முதல் பாதியில் ஹீரோ கிராமத்தில் இருப்பார். அடுத்த பாதியில் நகரத்திற்குச் செல்வார். வில்லன்னா கள்ளக்கடத்தல் செய்வான் என்பது நிச்சயம்.

'கொஞ்சம் மாற்றி யோசிங்கப்பா' என நமக்கே தோன்றுகிறது. இருந்தாலும் நாமும் அதைத் தானே ரசிக்கிறோம். என்னத்தைச் சொல்ல..!

Next Story