“என் பையன் ஒரு படம்தான் நடிப்பான்”… படத்தில் நடிக்க அனுமதி கொடுத்த பிரபல நடிகரின் தந்தை… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Ranjan
1940களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ரஞ்சன். இவர் “மங்கம்மா சபதம்”, “சந்திரலேகா”, “மின்னல் வீரன்”, “நீலமலை திருடன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஞ்சன் சினிமாவில் நடிக்க வந்த பின்னணி என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

Ranjan
நடிகர் ரஞ்சன் மிக சிறப்பாக நடனமாடக்கூடியவர். ஒரு முறை ரஞ்சன் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நாட்டிய நிகழ்ச்சியை பார்க்க அப்போது மிகப் பிரபலமான திரைக்கதை ஆசிரியராக இருந்த வேப்பத்தூர் கிட்டு சென்றிருந்தார். அந்த காலகட்டத்தில் வேப்பத்தூர் கிட்டு, ஆச்சார்யா என்ற பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
ரஞ்சனின் நாட்டியத்தை பார்த்த வேப்பத்தூர் கிட்டுவுக்கு, அவரின் நாட்டியம் மிகவும் பிடித்திருந்தது. அதே போல் ரஞ்சன் வால் வீச்சிலும் சிறப்பான பயிற்சியை பெற்றிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ஆச்சாரியாவிடம் ஒரு நாள் ரஞ்சனின் திறமைகள் குறித்து எடுத்து சொன்னார் வேப்பத்தூர் கிட்டு.

Ranjan
அதற்கு அடுத்த நாளே ஆச்சாரியாவும் வேப்பத்தூர் கிட்டுவும் ரஞ்சனின் வீட்டிற்குச் சென்று அவரின் தந்தையை சந்தித்தனர். ரஞ்சனை தாங்கள் இயக்கயிருக்கும் திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் ரஞ்சனின் தந்தை அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.
“சினிமாவில் நடித்தால் எனது பையன் கெட்டுப்போய் விடுவான். பல பெண்களோடு பழக்கம் வரும்” என்ற காரணத்தை கூறி ரஞ்சன் நடிப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார். எனினும் ஆச்சாரியாவும் வேப்பத்தூர் கிட்டுவும் விடாபிடியாக அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இதையும் படிங்க: இளையராஜாவின் இந்த பிரபலமான பாடலில் இவ்வளவு விஷயம் இருக்கா?? ராஜான்னா சும்மாவா!!

Ranjan
ஒரு கட்டத்தில் ஒரு நிபந்தனையுடன் ரஞ்சனின் தந்தை ஒப்புக்கொண்டார். “ரஞ்சன் சினிமாவில் நடிக்க நான் அனுமதி தருகிறேன். ஆனால் இந்த ஒரு படத்திற்கு மட்டுந்தான் அனுமதி. அதன் பின் அவனுடைய படிப்பை தொடர வேண்டும்” என்று நிபந்தனை போட்டார். ஆச்சாரியாவும் வேப்பத்தூர் கிட்டுவும் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டனர்.
அதன் பின் ரஞ்சன் “ரிஷ்ய சிருங்கர்” என்ற திரைப்படத்தில் நடித்தார். 1941 ஆம் ஆண்டு வெளிவந்த அத்திரைப்படம் அக்காலகட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “ரிஷ்ய சிருங்கர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமா என்னும் மாய வலை ரஞ்சனை இழுத்துக்கொண்டது. தந்தையின் நிபந்தனை எல்லாம் காற்றில் பறந்தன. அதன் பின் ரஞ்சன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிப்போனார்.