Cinema History
தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர்.. சாதனை பெண்ணின் வியக்கவைக்கும் வரலாறு..
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சியே என்றாலும் மற்ற துறைகளை போலவே அது ஒரு ஆண்மையவாத துறை என்றே கூறி வந்தனர். நடிப்பு, பாடல் என்பதை தவிர அத்தொழிலில் பெண்களுக்கான இடம் என்பது மிகவும் சொற்பமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் 1930களிலேயே ஒரு பெண், சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் சினிமா இயக்குனராகவும் ஜொலித்தார் என்றால் நம்ப முடிகிறதா?
1931 ஆம் ஆண்டு தமிழின் முதல் பேசும் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் “காளிதாஸ்” என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை டி பி ராஜலட்சுமி.
டி பி ராஜலட்சுமி 1911 ஆம் ஆண்டு திருவையாற்றில் ஒரு கணக்குப்பிள்ளை குடும்பத்தில் பிறந்தார். மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்ததினால் ராஜலட்சுமிக்கு 8 வயதிலேயே திருமணமும் நடைபெற்றது. ஆனால் வரதட்சணை கொடுமை தாள முடியாமல் கணவன் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.
தனது மகளுக்கு இப்படிப்பட்ட ஒரு அவல நிலை நேர்ந்து விட்டதே என பல காலமாக வருந்தி வந்த தந்தை அந்த சோகத்திலேயே மரணம் அடைந்தார். இதனால் பிழைப்பிற்காக அவரது தாயார் ராஜலட்சுமியை அழைத்துக்கொண்டு திருச்சிக்கு மாறினார்.
அங்கும் வறுமையே வாட்டியது. இந்த நேரத்தில் தான் தெரிந்தவர் ஒருவர், ராஜலட்சுமியை நாடகத்தில் சேர்த்துவிடுமாறு யோசனை கூறுகிறார். ராஜலட்சுமி நன்றாக பாடல் பாடுவார், மிகவும் அழகாகவும் இருப்பார். ஆதலால் இந்த யோசனை அவரது தாயாருக்கு சரி என்றுபட்டது.
அப்போது ராஜலட்சுமிக்கு வயது 11 தான். அந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சாமண்ணா அய்யர் என்பவரின் நாடக கம்பெனியில் சேர்ந்தார் ராஜலட்சுமி. தொடக்கத்தில் பல நாடகங்களில் ராஜலட்சுமி ஆண் வேடங்களிலேயே நடித்துள்ளார்.
எனினும் அதன் பின் அவரது நடிப்புத் திறமையும், குரலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராஜலட்சுமி அப்போது மிகவும் பிரபலமான பாடகராக திகழ்ந்த கிட்டப்பாவுடன் ஜோடியாக பல நாடகங்களில் நடித்தார். மேலும் தியாகராஜ பாகவதர் நாடகங்களிலும் நடித்தார்.
இவ்வாறு பல நாடகங்களில் நடித்து வந்த ராஜலட்சுமிக்கு அப்போது தயாரிக்கப்பட்டு வந்த ஊமைப் படங்களில் வாய்ப்புகள் வந்தது. அவர் நடித்த பல ஊமை படங்களை பெரும் வெற்றியை பெற்றது. இதனால் ராஜலட்சுமியின் கேரியரும் உயர்ந்தது. அதன் பின் தான் தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்” திரைப்படத்தில் நடித்தார்.
“காளிதாஸ்” திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வந்த ராஜலட்சுமி பிரபல நடிகரும் சுதந்திர போராட்ட வீரருமான டி வி சுந்தரத்தை மறுமணம் செய்துகொண்டார். அவரது நடிப்பையும் புகழையும் பார்த்த அப்போதைய பத்திரிக்கையாளர்கள் அவருக்கு “சினிமா ராணி” என்ற பட்டத்தையும் அளித்தனர்.
அதன் பின் அப்புகழின் பயனால் “ராஜம் தியேட்டர்ஸ்” என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் ராஜலட்சுமி. அத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக 1936 ஆம் ஆண்டு “மிஸ் கமலா” என்ற திரைப்படத்திற்கு கதையும் எழுதி அதனை இயக்கவும் செய்தார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர் என்ற வரலாற்றுச் சம்பவமாக இது அமைந்தது.
அதன் பின் பல திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் வந்த டி பி ராஜலட்சுமி சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து “இந்திய தாய்” என்ற திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அப்போதைய வெள்ளை அரசு சென்சார் போர்டின் மூலம் அந்த முயற்சியை தடுத்தது. அதனால் பெரும் நஷ்டமும் வந்தது. அதன் பின் மிகவும் சொற்பமான திரைப்படங்களிலேயே நடித்த ராஜலட்சுமி, இறுதி வரை நடிகை என்ற கவுரவத்துடனே வாழ்ந்து மறைந்து போனார்.
தமிழ் சினிமாவில் தற்காலத்தில் சுதா கொங்கரா, ப்ரியா V போன்ற சில பெண் இயக்குனர்கள் சாதித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக அதுவும் சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்திலேயே ஒரு பெண் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றிருக்கிறார் என்றால் ஆச்சரியத்தக்க விஷயம் தான்.