சோழ சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்டு வெளியான படங்கள் - ஓர் பார்வை

PS 1
கட்டடக்கலையில் புகழ்பெற்றவர்கள் சோழர்கள். அவர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு அதிசயத்தையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் இன்னொரு பெரிய சாட்சியாக விளங்கி நம்மை பரவசப்படுத்துகிறது.
கட்டடக்கலையில் மட்டுமல்லாமல் வீரம், காதல் என அனைத்திலும் சோழ அரசர்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர். இனி அவர்களைப் போற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்ப்போமா...
ராஜ ராஜ சோழன்

Raja Raja Cholan
1973ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன்.
சிவாஜி, விஜயகுமாரி, முத்துராமன், சிவகுமார், லட்சுமி, நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், சீர்காழி கோவிந்தராஜன், சுருளிராஜன், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மததியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
தசாவதாரம்

Dasavatharam
இந்தப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். ஆரம்ப காட்சியில் ரங்கராஜன் நம்பியாக வரும் கேரக்டர் படத்தில் அவருக்கே உரிய ஆக்ஷன் காட்சியுடன் ஆரம்பிக்கிறது.
அப்போது கமல் சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல். அப்படி சொன்னவன் இந்த ரங்கராஜன் நம்பி என்று சொல். மன்னனைச் சூழ இருக்கும் பிற தோஷங்களுடன் பிரம்மஹத்தி தோஷமும் சூழும் என்று சொல் என்று அவனது அடியாட்களிடம் சொல்லி அனுப்புவார்.
அது யார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றால் அவர் தான் இரண்டாம் குலோத்துங்க சோழன். இந்த கதாபாத்திரத்தில் கெத்தாக நடித்து கலக்கியவர் நெப்போலியன். யானை மேல் ஒய்யாரமாக வருவார். வைணவம் தான் பெரியது என்று சொல்லும் கமலை கல்லில் கட்டி கடலில் ஆழ்த்துவார்.
அம்பிகாபதி

Ambigapathi 1937
1937ல் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் வெளியான படம். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.வி.ரெங்காச்சாரி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
அப்போதே ஓராண்டு காலம் ஓடி சாதனை படைத்தது. தமிழ்சினிமாவில் முதல் முத்தக்காட்சி இடம்பெற்ற படமும் இதுதான். இந்தப்படத்தில் இருந்து தான் தமிழ் வசனங்கள் எளிமையாகவும் அழகாகவும் கேட்பதற்கு ரசனையாகவும் இருந்தது.
இந்தப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு அரசனின் மகளை சாதாரண புலவரின் மகன் காதலிக்கிறான். காதல் வெற்றி பெற்றதா என்பது தான் கதை.
1957ல் இதே பெயரில் மீண்டும் படம் வந்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் வெளியான படம். சிவாஜி, பானுமதி, என்.எஸ்.கிருஷ்ணன், நம்பியார், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்கiளை டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ளார்.
பொன்னியின் செல்வன்
2022ல் வெளியான இந்தப்படம் நீண்ட நாள்களாக பலரும் எடுக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கிய போதும் அது தோல்வியில் முடிந்தது. கடைசியில் மணிரத்னம் இயக்க பிரம்மாண்டமாக உருவானது. கல்கி எழுதிய இந்த நாவலை மணிரத்னம் இரு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வசூலை ஈட்டியது.
கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். சோழ சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்ட இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.