தமிழ்சினிமாவில் வாத்தியாராக கலக்கிய நடிகர்கள்
நடிகர்களில் வாத்தியார் யார் என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத் தான் சொல்வார்கள். மற்ற நடிகர்களுக்கு அவர் வாத்தியாராக இருந்து ஜெயிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தவர் என்பதால் தான்.
படங்களில் வாத்தியார் கேரக்டரில் நடித்துள்ள நடிகர்கள் யார்? அவர்கள் என்னென்ன படங்களில் நடித்தனர் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆனந்த ஜோதி
1963ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் வி.என்.ரெட்டி. எம்ஜிஆருடன் தேவிகா, எம்ஆர்.ராதா, அசோகன், பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இந்தப்படத்தில் எம்ஜிஆர் பள்ளிக்கூட வாத்தியாராக வருவார். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. காலமகள், கடவுள் இருக்கின்றான், நினைக்கத் தெரிந்த மனமே, ஒரு தாய் மக்கள், பல பல, பனியில்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
நம்மவர்
கமல் செல்வம் என்ற வைஸ் பிரின்சிபல் கேரக்டரில் வெளுத்து வாங்கினார். போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் கல்லூரி மாணவர்களுக்கு அதிலிருந்து மீட்டெடுக்க கமல் போராடுகிறார். 1994ல் வெளியான இந்தப்படத்தை கே.எஸ்.சேதுமாதவன் இயக்கினார். மகேஷ் மாதவன் இசை அமைத்துள்ளார்.
கமலுடன் கவுதமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, கரண் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. பூங்குயில் பாடினால், எதிலேயும் வல்லவன்டா, மண்ணில் எங்கெங்கும், சொர்க்கம் என்பது நமக்கு, உடையோடு பிறக்கவில்லை ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப்படத்தின் ரீவெர்சனாகவே விஜய் நடித்த மாஸ்டர் படம் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட ரெண்டுமே ஒரே கதை தான். போதைக்கு அடிமையாகும் மாணவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் கதை தான். மாஸ்டர் படத்தில் விஜய் ஜேடி எனும் புரொபசராக நடித்திருப்பார்.
நான் சிகப்பு மனிதன்
ரஜினிகாந்த் புரொபசர் ஆக நடித்துள்ளார். இரவில் வில்லன்களை வேட்டையாடுகிறார். ஒரு த்ரில்லான இந்தப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
சிங்காரம் என்ற துப்பறியும் கேரக்டரில் வெகுநேர்த்தியாக துப்பறிந்து ரஜினி தான் இரவில் கொலை செய்கிறார் என்பதைக் கண்டறிகிறார். 1985ல் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப்படமானது. எல்லாருமே திருடங்கதான், காந்தி தேசமே காவல் இல்லையா, குங்குமத்து மேனி, பெண் மானே, வான்மேகம் விண்ணில் ஆகிய பாடல்கள் உள்ளன.
மாஸ்டர்
இந்தப் படத்தில் ஜேடி என்ற பெயரில் விஜய் புரொபசர் ஆக உள்ளார். விஜய்சேதுபதி வில்லன். பள்ளி மாணவர்களை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்கி தன் குற்றச்செயல்களுக்கு அவர்களை ஈடுபடுத்துகிறார்.
விஜய் எப்படி மீட்டெடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. குட்டிக்கதை, வாத்தி கம்மிங், அந்த கண்ண பார்த்தாக்கா ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
சாட்டை
2012ல் வெளியான இந்தப்படத்தில் சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியர் ஆக நடித்து அசத்தினார். பள்ளியில் ஏனோ தானோவென்று இருக்கும் ஆசிரியர்களுக்கு சாட்டை அடி கொடுக்கிறார் சமுத்திரகனி.
எம்.அன்பழகன் இயக்கிய இந்தப்படம் அனைத்துத் தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இமான் இசை அமைத்துள்ளார். சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா, பாண்டி, பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர்.