இனி அடுத்தக்கட்டம்...இது தான்...! அதகளப்படுத்தப்போகும் தமிழ்சினிமா 2023
ஊமைப்படமாய் இருந்து கருப்பு வெள்ளையில் ஆரம்பித்த தமிழ்சினிமாவில் நாளுக்கு நாள் புதுமையான தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது.
முதலில் சாதாரண கருப்பு வெள்ளை படம் மட்டும் வந்தது. அது கொஞ்சம் மாற்றமடைந்து கலர் சினிமாவானது. அதுவும் ஈஸ்ட்மென்ட் கலரில் மட்டுமே வந்தது. அதன்பிறகு படத்தைப் பார்க்கும் மக்களின் கூட்டம் அதிகரிக்கவே கலர் சினிமாவானது. தொடர்ந்து சினிமாஸ்கோப் வந்தது.
அதன்பிறகு இனி சவுண்டில் புதுமை செய்வோம் என்றது தமிழ்சினிமா. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் துல்லியமான சவுண்ட் கிடைத்தது. ஒலியை பல்வேறு கூறுகளாகப் பிரித்து நமக்கு இது பாஸ்...இது சில்...என்று பிரித்தது. மென்மையான ஒலிக்கீற்றுகளும் நமக்குக் கேட்கும் வகையில் படம் வெளியானது.
உதாரணத்திற்கு அந்தக்காட்சியில் திரையில் தெரியாத எங்கோ ஒரு மூலையில் இருந்து நாய் குரைத்தாலும் அந்த சத்தம் நம்மை நமது சீட்டிற்குப் பின் திரும்பிப் பார்க்க வைத்தது. ஹெலிகாப்டர் ஒரு மூலையிலிருந்து பறந்து வட்டமிட்டுச் சென்றது. நம் கண்கள் திரையரங்கு முழுவதும் நோட்டமிட்டது. முதன்முதலில் டால்பி ஸ்டீரியோ மற்றும் சரவுண்ட் டெக்னாலஜியில் வந்த முதல் தமிழ்ப்படம் கமலின் குருதிப்புனல்.
இருக்கையின் அடியில் இருந்தும் சப்தம் வருகிறது. தலைக்கு மேலிருந்தும் சப்தம் வருகிறது. என்னடா இது புதுமையாக இருக்கே என ஆச்சரியத்துடன் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக பெரிய மால் உள்ள திரையரங்கிற்குச் சென்றனர். அங்கு டிக்கெட் விலையை விட பாப்கார்ன் விலை அதிகமாக இருந்தது. டிடிஎஸ் சவுண்டின் இந்த நுட்பம் 7 ட்ராக், டால்பி, சரவுண்ட் என நம்மை திணறடித்தது.
லேசர் தொழில்நுட்பத்துடன் திரையரங்கையும் புதுமை செய்தார்கள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் படத்திற்கான கதையும், ஒளிப்பதிவும், திரைக்கதையும், கிராபிக்சும் நமக்கு புதிய புதிய பார்முலாக்களைக் கற்றுக் கொடுத்தது.
படத்தில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்று கடைசி வரை யாருக்கும் தெரியாது. ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்கும். உதாரணத்திற்கு அபூர்வசகோதரர்கள் குள்ள கமல், ஆதவனில் சிறு வயது சூர்யா, இந்தியன் தாத்தா கமல், அவ்வை சண்முகி கமல், தசாவதாரம் கமலின் 10 மாறுபட்ட வேடங்கள் என்று நாம் அடுக்கிக்கொண்டே சொல்லலாம்.
தற்போது வெளிவரவுள்ள விக்ரமில் புது வித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 86ல் உள்ள கமலின் தோற்றத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி உள்ளார்கள். இனி வரும் காலங்களில் சாரல் மழை திரையில் ஓடும் படத்தில் பெய்தால் நமக்கும் அந்த சாரல் வீசும்.
தென்றல் தவழ்ந்தால் நமக்கும் அந்த சில்லென்ற உணர்வு கிடைக்கும். மல்லிகைப்பூவைத் தலைநிறைய வைத்துக்கொண்டு சிங்காரியாய் ஒய்யார நடைபோட்டு நம்ம ஹீரோயின் வந்தால் திரையரங்கு முழுவதும் மல்லிகைப்பூ வாசம் கமகமக்கும். இவை அனைத்தும் வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று சொல்கிறீர்களா?
ஏன் வரும் 2023ல் அந்த அதிசயம் நடக்கக்கூடாதா? இது வரை யாரும் செய்யாத புதுமையை தமிழ்சினிமா செய்து வந்து கொண்டே உள்ளதே...ஏன் இந்த அதிசயமும் நடந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. 6 வருடமாகக் காத்திருந்து ஒரு பெண் இயக்குனர் படத்தை எடுத்து வருகிறார்.
எதற்காக என்றால் படம் யதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காகத் தான். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 6 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எப்படி இருந்தார்கள்? என ஆரம்பித்து 6 வருடத்திற்குப் பின் என்று காட்டி தற்போதைய முகத்தோற்றத்தைக் கொண்டு படம் எடுத்துள்ளனர்.
சாதாரணமாக ஒரு கதாநாயகனின் சிறுவயது வேடம் என்றால் அவன் சாயலில் உள்ள ஒரு சிறுவனை நடிக்க வைத்து விடுவார்கள். இதுதான் பிளாஷ்பேக் காட்சியாக வந்து கொண்டு இருந்தது. இதிலும் புதுமையை செய்துள்ளார் பெண் இயக்குனர் ஹலீதா ஹமீம். மின்மினி என்ற படத்திற்காகத் தான் இந்த அதி அற்புத யுக்தி கையாளப்பட்டுள்ளது. இது இதுவரை உலகில் யாரும் செய்யாத புதுமை. தமிழ்சினிமா செய்து காட்டியது நமக்கு பெருமை தானே..! ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் படம் சாதனைப்புத்தத்தில் இடம்பெறவில்லையா?