இந்த வீடு நமக்கு சொந்தமல்ல.. பாடுடா சின்னத்தம்பி.. தமிழ்ப்படங்களில் ஏழை படும் பாடு.. ஒரு பார்வை!..

Yelai padum padu
அன்று முதல் இன்று வரை ஏழை, பணக்காரன் வர்க்கம் தொடர்ந்து வருகிறது. ஏழைகளில் ஒரு சிலர் ஒருவேளை உணவுக்காகக் கூட கஷ்டப்படுகின்றனர். ஒரு சிலர் திடீர் என அவர்கள் அதிர்ஷ்டத்தாலும், உழைப்பாலும் முன்னேறி பணக்காரர்களாகி விடுகின்றனர்.
இன்றும் ஒரு சிலர் அன்று முதல் ஏழையாகவே உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கை எப்போது மலரும் என்று காத்துக்கிடக்கின்றனர். ஏழைகள் நிஜவாழ்க்கையில் என்னென்ன கஷ்டத்திற்குள்ளாகிறார்கள் என்பதைத் தமிழ்படங்கள் பல சித்தரித்துள்ளன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஏழை படும் பாடு
1950ல் வெளியானது. கே.ராம்நாத் இயக்கியுள்ளார். 10 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து விடுதலை பெற்ற இளைஞன் கந்தன். அவன் சிறையிலிருந்து வந்தவன் என்பதால் அவன் சாதிசனங்கள் அவனுக்கு ஆதரவு தர மறுக்கிறது.
அவனை அவமானப்படுத்தியும் விடுகின்றனர். இதனால் கந்தன் யாரும் உதவாத நிலையில் ஆதரவற்றவனாக பசியாலும், பட்டினியாலும் வாடுகிறான்.
கந்தனுக்கு கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் மனிதாபிமான உதவிகள் செய்கிறார். அவன் ஜெயில் தண்டனை பெற்று வந்தவன் என்பதை அறிகிறார். அப்படி இருந்தும் அவனைத் தனக்குச் சரிசமமாக உட்கார வைத்து உணவும், உடையும் வழங்குகிறார்.
ஒரு தடவை தங்கையைக் காண அவள் வீட்டிற்குச் செல்கிறான் கந்தன். பணமில்லாத காரணத்தால் அவன் குடும்பம் முழுவதும் பலியானதை அறிகிறான்.
பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்? அந்தப் பணம் மட்டும் இருந்திருந்தால் தன் தங்கையும் அவள் குடும்பத்தினரும் இறந்திருக்க மாட்டார்கள் என்பதை உணர்கிறான்.
பணத்திற்காக கொள்ளையடிக்கவும் முடிவு எடுக்கிறான். முதல் முயற்சியாக தனக்கு உணவு, உடை வழங்கி ஆதரவு தந்த பாதிரியார் வீட்டிலேயே திருடுவது என திட்டமிடுகிறான்.
ஆனால் அவன் கொள்ளையடிக்கும்போது அங்குள்ள காவலர்களால் கைது செய்யப்பட்டு பாதிரியார் முன்பாக நிறுத்தப்படுகிறான். அப்போதுதான் தான் செய்த தவறுக்காக கந்தன் கண்ணீர் விட்டு அழுகிறான்.
உங்கள் கண்ணீர் உங்கள் உள்ளத்தை சுத்தமாக்கி விட்டது எனக்கூறும் பாதிரியார் அவனது தவறுகளை மன்னித்து அவன் சம்பாதித்துக் கௌரவமாக வாழ கண்ணாடித் தொழில் ஆரம்பிக்க வெள்ளிச் சாமான்களை அளிக்கிறார். பாதிரியாரின் இந்தப் பதிவு இந்துவாக இருந்த அவனை கிறித்தவனாக மாற்றி தயாளனாக்குகிறது.
இந்தப்படத்தில் ஜாவர் என்ற பெயரில் நடித்ததால் இன்ஸ்பெக்டர் சீதாராமன்... ஜாவர் சீதாராமன் ஆனார். நாகையா, எம்.என்.ராஜம், பத்மினி, லலிதா, என்னத்த கன்னையா, டி.எஸ்.பாலையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏழை ஜாதி

Yelai Jaathi
1993ல் வெளியான படம் ஏழை ஜாதி. லியாகத் அலிகான் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த், ஜெயப்பிரதா, மனோரமா, விஜயகுமார், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், செந்தில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கிறார் விஜயகாந்த். ஏழைஜாதி, அதோ அந்த நதியோரம், இந்த வீடு, கொடுத்தாலும், அன்பே வா ஆகிய பாடல்கள் உள்ளன.
மாடிவீட்டு ஏழை

Maadi veettu Yelai
1981ல் அமிர்தம் இயக்கத்தில் வெளியான படம் மாடி வீட்டு ஏழை. மு.கருணாநிதியின் கதையில் சிவாஜியின் நடிப்பில் படம் பட்டையைக் கிளப்பியது. ஸ்ரீபிரியா, சுஜாதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
ஏழையின் சிரிப்பில்

Yelaiyin sirippil
2000ல் வெளியானது. சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவாவின் நடிப்பில் காமெடி கலந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்தது. கௌசல்யா, அனுமோகன், காகா ராதாகிருஷ்ணன், குமரிமுத்து, நாசர், பாண்டு, ரஞ்சித், விவேக், ரோஜா, சுவலெட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.