ஹீரோயினை கடத்திய வேற்றுகிரகவாசி… காப்பாற்றத் துடிக்கும் எம்ஜிஆர்… தமிழின் முதல் சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் இதுதான்…
தமிழின் முதல் ஸ்பேஸ் ஃபிக்சன் திரைப்படம் என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது ஜெயம் ரவி நடித்த “டிக் டிக் டிக்” திரைப்படம்தான். ஆனால் இத்திரைப்படம் வெளியாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தமிழில் இப்படி ஒரு அசாத்தியமான கதையம்சத்துடன் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஆம்!
கடந்த 1963 ஆம் ஆண்டு எம் ஜி ஆர், பானுமதி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கலையரசி”. இத்திரைப்படத்தை இயக்கியவர் காசிலிங்கம். இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் ஞானமூர்த்தி. இத்திரைப்படத்தை எம்ஜீயார் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இனி இத்திரைப்படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒரு கிராமத்தில் எம் ஜி ஆரும் பானுமதியும் காதலித்து வருகிறார்கள். அப்போது நம்பியார் வேற்றுகிரகத்தில் இருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வருகிறார். அப்போது பானுமதியை பார்க்கும் நம்பியார், பறக்கும் தட்டில் பானுமதியை கடத்திக்கொண்டுப்போகிறார்.
அதாவது நம்பியாரின் கிரகத்தில் அறிவியல் வளர்ச்சி அதிகம் இருந்தாலும் கலை என்ற ஒரு விஷயமே இல்லை. இதனால் அந்த கிரகத்தை ஆளும் அரசன் பூமிக்குச் சென்று நன்றாக ஆடக்கூடிய பாடக்கூடிய நபரை இந்த கிரகத்திற்கு அழைத்துவர ஆணையிடுகிறார். அதன்படிதான் பூமியில் நன்றாக பாடுபவரை தேடி வரும் நம்பியார், பானுமதியின் திறமையை பார்த்து அவரை கடத்திக்கொண்டுச் செல்கிறார்.
பானுமதியை தேடி அலைந்துகொண்டிருக்கும் எம்ஜிஆர், இன்னொரு பானுமதியை பார்க்க, அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். இப்படி இருக்க ஒரு நாள் என் ஜி ஆர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பின் தொடர அவர் ஏலியன் என தெரியவருகிறது. அந்த ஏலியனை தாக்கிவிட்டு பறக்கும் தட்டில் ஏறிக்கொள்கிறார் எம் ஜி ஆர். அதன் பின் அந்த கிரகத்திற்கு போகும் எம் ஜி ஆர், தன்னுடைய காதலியை பார்த்தாரா? அவரை பூமிக்கு மீட்டு வந்தாரா? என்பதே கதை.
அந்த காலத்திலேயே இது போன்ற முயற்சியை மேற்கொண்டதற்கு இயக்குனர் காசிலிங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும். இத்திரைப்படத்தில் பறக்கும் தட்டில் இருந்து பூமியை கண்காணிக்கும் திரை ஒன்றை நம்பியார் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அப்போதே இது போன்று நவீனமாக சிந்தித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் “கலையரசி” திரைப்படம் வணிக ரீதியாக படுதோல்வி அடைந்தது. ஆதலால்தான் இத்திரைப்படம் பரவலாக அறியப்படவில்லை.