தமிழ்சினிமாவிற்கு மென்மேலும் அழகு சேர்த்த கோவில் சார்ந்த படங்கள் - ஓர் பார்வை
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். இது எதற்காக என்றால் ஒரு ஊரில் கோவில் இருக்கும்போதுதான் நல்ல எண்ணம் கொண்டு மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சாமி கும்பிட வருவார்கள்.
நல்லெண்ணங்கள் ஒன்று கூடுகையில் அங்கு சக்தி அதிகமாகக் காணப்படும். அந்த நேரத்தில் நாம் அங்கு சென்றால் நமக்கு புதுவித சக்தி கிடைக்கும். புத்துணர்வு வரும். கவலைகள் அகலும். பிரச்சனைகள் தீர்க்க இது ஒரு முக்கியமான சங்கமமாக விளங்கும்.
அதனால் தான் ஊரில் எங்கும் கோயில் கட்டி வைத்தனர் அறிவிற்சார்ந்த நம் முன்னோர்கள். அந்த வகையில் தமிழ்சினிமாவிலும் கோவிலை மையமாகக் கொண்டு படங்களுக்குத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
கோவில் புறா
1981ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கே.விஜயன். சங்கர், சரிதா மற்றும் வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள்.
அமுதே தமிழே அழகிய மொழியே என்னுயிரே என்ற பாடல் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும். தமிழின் பெருமையை அழகுபட எடுத்துச்சொல்கிறது இந்தப்பாடல். புலமைப்பித்தன் எழுதிய இந்தப்பாடலை இப்போது கேட்டாலும் நமக்கு புத்துணர்வு கிடைக்கும்.
இதயக்கோவில்
1985ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் மணிரத்னம். மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணராவ், டைப்பிஸ்ட் கோபு, பசி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
இதயம் ஒரு கோயில், யார் வீட்டில் ரோஜா, கூட்டத்திலே கோயில் புறா, பாட்டுத்தலைவன், நான் பாடும் மௌனராகம், வானுயர்ந்த சோலையிலே, ஊரோரமா ஆத்துப்பக்கம் என தாளத்திற்கேற்ப தலையை ஆட்ட வைக்கும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அம்மன் கோவில் கிழக்காலே
1986ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்துடன் இணைந்து ராதா, செந்தில், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, ராதாரவி, வினுச்சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சின்னமணிக்குயிலே, கட வீதி, காலை நேர, ஒரு மூணு முடிச்சாலே, பூவ எடுத்து ஆகிய பாடல்கள் உள்ளன.
அம்மன் கோவில் வாசலிலே
ராமராஜன் நடித்து இயக்கிய படம். 1996ல் வெளியானது. சிற்பி இசை அமைத்துள்ளார். ராமராஜனுடன் இணைந்து சங்கீதா, மணிவண்ணன், செந்தில், காந்திமதி, குள்ளமணி, ஆர்.சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அம்மன் கோயில், என்ன விலை அது, இளமனசு, பொன்னூஞ்சல் ஆடுது, உன் மல்லியப்பூ, வந்தால் புகுந்த ஆகிய பாடல்கள் உள்ளன.
கோவில்
2004ல் வெளியான இந்தப்படத்தில் சிலம்பரசனின் நடிப்பில் முதிhச்சி தெரிந்தது. அவருடன் இணைந்து சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர், ராஜேஷ், ரேகா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ஹரி இயக்கத்தில் வெளியான இது ஒரு அதிரடி திரைப்படம். புயலே புயலே, அரளி விதையில், காலேஜிக்கு, காதல் பண்ண, கொக்கு மீனா, சிலு சிலு ஆகிய பாடல்கள் உள்ளன.
இவை தவிர குடியிருந்த கோயில், அண்ணன் ஒரு கோயில் ஆகிய படங்களும் உள்ளன.