தமிழில் இத்தனை நான் லீனியர் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறதா?.. அடேங்கப்பா!!
சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த “இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும் நான் லீனியர் என்றால் என்ன என்பதற்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்தது. ஒரு திரைக்கதை ஒழுங்கமைவோடு இல்லாமல் காட்சிகளை முன்னும் பின்னும் அமைத்து, ஆனால் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் திரைப்படம் தான் நான் லீனியர் திரைப்படம்.
தமிழில் 1950களில் இருந்தே நான் லீனியர் திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படி தமிழில் வெளிவந்த சில நான் லீனியர் திரைப்படங்களை குறித்து பார்ப்போம்.
அந்த நாள்
1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய், ஜாவர் சீதாராமன் ஆகியோரின் நடிப்பில் வீணை பாலச்சந்திரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அந்த நாள்”. ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை அவர் செய்திருப்பாரா? இல்லை இவர் செய்திருப்பாரா? என சந்தேகம் ஏற்படுத்தும்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் கோணத்தில் நான் லீனியராக எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அப்போதே பாடல்கள் இல்லாமல் வெளிவந்த தமிழின் முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
12 B
2001 ஆம் ஆண்டு தமிழில் முதல் முயற்சியாக வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த திரைப்படம் “12 B”. ஷாம், ஜோதிகா, சிம்ரன், விவேக் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கியிருந்தார். ஹீரோ ஒரு பஸ்ஸை தவறவிட்டுவிடுகிறார். ஒரு வேளை அவர் அந்த பேருந்தில் ஏறியிருந்தால் என்ன நடந்திருக்கும், ஏறாமல் போனால் என்ன நடந்திருக்கும் என்ற அடிப்படையில் ஹீரோவின் இரண்டு வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை தனிதனியாக காட்டியிருப்பார். தமிழின் சிறந்த முயற்சிதான் என்றாலும் இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
விருமாண்டி
2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பசுபதி, நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விருமாண்டி”. கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கியிருந்தார். அன்னலட்சுமியை காதலிக்கும் விருமாண்டி, கொத்தாளத்தேவர் விருமாண்டிக்கு செய்த துரோகம், நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்குமான புரிதல், இவ்வாறு போகும் திரைக்கதையை நான் லீனியராக மிகவும் விறுவிறுப்பாக அமைத்திருப்பார் கமல்ஹாசன்.
ஆய்த எழுத்து
கடந்த 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆய்த எழுத்து”. சிவா, ருத்ரா, அர்ஜூன் ஆகிய மூவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அவர்கள் மூவரையும் எப்படி இணைக்கிறது என்பதை மிகவும் சுவாரசியமாக சொன்ன திரைப்படம் “ஆய்த எழுத்து”. எனினும் இத்திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.
குரங்கு பொம்மை
கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த், பாரதிராஜா ஆகியோரின் நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “குரங்கு பொம்மை”. சூழ்நிலை காரணமாக ஹீரோவின் தந்தை ஒரு குரங்கு படம் போட்ட பேக்கை ஒரு இடத்தில் சேர்க்க வேண்டியிருக்கிறது. இதனால் அவரும் ஹீரோவும் சந்திக்கும் திருப்பங்களை நான் லீனியர் திரைக்கதையில் மிகவும் சுவாரசியமாக கூறியிருப்பார் இயக்குனர்.