சாதிய வச்சி படம் எடுத்தா நாங்களாம் எங்க போறது?- மாரி செல்வராஜை கண்டபடி கேட்ட காமெடி நடிகர்…
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், முத்தையா போன்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு விருப்பமான திரைப்படங்களாக இருந்தாலும் ஒரு பக்கம் இவர்கள் சாதியை மையமாக வைத்து படமாக்குகிறார்கள் என்று ஒரு விமர்சனத்தையும் பலர் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக மாரி செல்வராஜ் திரைப்படங்களின் மீது எப்போதும் பலருக்கு ஒரு விமர்சனப் பார்வை உண்டு. மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். ஆனால் அத்திரைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. அதுவும் “கர்ணன்” திரைப்படத்திற்கு அதிக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
இத்திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இத்திரைப்படம் இந்த ஜூன் மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வடிவேலு தனது சொந்த குரலில் பாடிய “ராசா கண்ணு” பாடல் கேட்பவர்களின் மனதை உருகவைக்கும் பாடலாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த டெலிஃபோன் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மாரி செல்வராஜ் அவரது ஊர்க்காரர்களை எல்லாம் நடிக்க வைக்கிறார். நீங்கள் மனுஷன்தானே. எங்களை மாதிரி நடிகர்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது. இந்த மாதிரி கேவலமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். முத்தையான்னு ஒருத்தர் இருக்கார். அவர் அவரது ஊர்க்காரர்களை வைத்துத்தான் படம் எடுக்கிறார்கள்.
இது போன்று ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள் பலரும் அவரவர்களின் சாதி ஆட்களையே நடிக்க வைக்கிறார்கள். அப்படி என்றால் என்னை போன்ற நடிகர்கள் எங்கே போவார்கள்” என மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.