கமலையே கலாய்ச்சாங்க!. விஜய் சேதுபதி என்ன பண்ணுவாரோ?!.. பிக்பாஸ் பிரபலம் சொல்றதை கேளுங்க!...
Biggboss Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது. பலரும் விரும்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை கடந்திருக்கிறது இதுவரை எல்லா சீசன்களையும் கமல்ஹாசனே நடத்தியிருந்தார். முதல் சீசனை கமல் நடத்துகிறார் என்கிற செய்தி வெளியான போது கமல் எப்படி இதை செய்வார் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டது.
ஆனால், மிகவும் சிறப்பாகவே இந்த நிகழ்ச்சியை நடத்தினார் கமல், அவர் நிகழ்ச்சியையும், போட்டியாளர்களையும் நடத்திய விதம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. பாராட்ட வேண்டியதை பாராட்டியும், தவறுகளை சுட்டிக்காட்டியும் நிகழ்ச்சியை சரியாகவே கொண்டு போனார் கமல். வார நாட்களில் பார்க்காதவர்கள் கமல் வரும் வார இறுதி நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
கமல் இந்த நிகழ்ச்சியை நடத்தியது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதோடு, நிகழ்ச்சிக்கும் நல்ல டி.ஆர்.பி கிடைத்ததால் விஜய் டிவி நிர்வாகம் தொடர்ந்து அவரையே நிகழ்ச்சியை நடத்த சொன்னது. அப்போது கமலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்ததால் தொடர்ந்த் பிக்பாஸ் சீசன்களை நடத்தி வந்தார்.
ஆனால், கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனியை கமல் வெளியேற்றியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவரின் அந்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். சமூகவலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். இப்போது விரைவில் 8வது சீசன் துவங்கவுள்ளது.
இந்த முறை கமல் நிகழ்ச்சியை நடத்தவில்லை. அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நடத்தவிருக்கிறார். விஜய் சேதுபதி எப்போதும் தத்துவம் பேசுபவர். அவர் எப்படி இந்த நிகழ்ச்சியை நடத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. வருகிற அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.
இந்நிலையில், நடிகையும், கடந்த சீசனில் கலந்துகொண்டவருமான விசித்ரா ‘விஜய் சேதுபதி சரியான தொகுப்பாளராக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன். சீனியர் நடிகரான கமல் சாரையே கடந்த சீசனில் ட்ரோல் செய்தார்கள், கலாய்த்து மீம்ஸ் போட்டார்கள். எனவே, விஜய் சேதுபதியும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’ என கருத்து சொல்லியிருக்கிறார்.