Ranabaali OTT Release: நவம்பர் 13 நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ரணபாலி!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ரணபாலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 13-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவான ரணபாலி ஒரு பீரியட் ஆக்ஷன் திரைப்படம். 1876 முதல் 1878 வரையிலான Great Madras Famine காலகட்டத்தின் பின்னணியில் ராயலசீமா பகுதியில் கதை நடைபெறுகிறது. சிங்கனமலா பொப்பிலி ரணபாலி என்ற வீரனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறையாலும் உணவுப் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படும் மக்களுக்காக அவர் போராடுவதுதான் கதையின் முக்கிய அம்சமாக உள்ளது. ரணபாலியின் மனைவி ஜெயம்மா கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
பிரிட்டிஷ் அதிகாரியாக ஹாலிவுட் நடிகர் Arnold Vosloo நடித்துள்ளார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், லால், வினோத் சாகர், மது நந்தன், கிஷோர் குமார் பொலிமேரா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அஜய்–அதுல் இசையமைத்துள்ளனர். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி, மற்றும் சூரியின் மண்டாடி, மொத ராத்திரி ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ரணபாலி படத்தின் ரசிகர்களை கவர்ந்த ஒரு விசயம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி அமைந்தது. கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்த படம் என்பதால் ஆரம்பத்திலிருந்தே ரணபாலி மீது எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக அமைந்ததாக விமர்சனங்களில் பாராட்டப்பட்டது.

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ரணபாலிக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. வரலாற்றுப் பின்னணியில் கதையை உருவாக்கிய விதம், விஜய் தேவரகொண்டாவின் தீவிரமான நடிப்பு, ராஷ்மிகாவின் கதாபாத்திரம், இருவரின் கெமிஸ்ட்ரி, ஒளிப்பதிவு மற்றும் பிரம்மாண்டமான செட் அமைப்புகள் ஆகியவை படத்தின் பலமாக விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டன. அதேநேரத்தில் படத்தின் நீளம், குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை நகரும் வேகம் குறைவது, விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை ஆகியவை ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் ரணபாலி பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்தது. Sacnilk வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, நவம்பர் 1 வரை படம் உலகளவில் சுமார் ரூ.80.03 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் ரணபாலி ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நவம்பர் 13 முதல் நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ரணபாலி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
