Sanjeev: பெத்தவங்க ஆசையை நிறைவேத்த முடியல!.. கதறி அழும் நடிகர் சஞ்சீவ்!...
சினிமா குடும்ப பின்னணி இருந்தாலே சினிமா ஒரு நடிகரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்திவிடாது. அவர்கள் நடிக்கும் படங்கள், அதற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு போன்ற எல்லாவற்றையும் பொறுத்து ஒரு நடிகரின் எதிர்காலம் சினிமாவில் அமையும்.தயாரிப்பாளர் மகன், இயக்குனர் மகன், நடிகரின் மகன் என வாரிசுகளாக பலரும் சினிமாவில் களமிறங்கி இருந்தாலும் எல்லோரும் வெற்றி பெற்று பெரிய இடத்தை பிடிப்பதில்லை. அதேபோல் சினிமா பின்புலமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து சிவகார்த்திகேயன் போல சிலர் உச்சம் தொடுவதுண்டு. அது அவர்களுக்கு அமையும் படங்களை பொறுத்தது.
சின்னத்திரை நடிகர் சஞ்சீவுக்கு கூட அவரின் சினிமா கனவுகள் நிறைவேறவில்லை. சஞ்சீவ் நடிகர் விஜயுடன் லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தவர். இப்போதும் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும் ‘வாடா போடா’ நண்பர்கள். விஜயுடன் சில படங்களில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். சஞ்சீவின் பின்னணி பலருக்கும் தெரியாது. இவரின் அக்கா நடிகை சிந்து இணைந்த கைகள் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தவர். ஆனால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
நடிகர் விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளாவின் சகோதரி மகன்தான் இந்த சஞ்சீவ் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் போனார் சஞ்சீவ். திருமதி செல்வம் சீரியல் இவரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், அகல்யா, மனைவி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார் சஞ்சீவ்.

கடந்த 23 வருடங்களாக சீரியலில் நடித்து வரும் சஞ்சீவிக்கு சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை என்கிற கவலை இருக்கிறது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சஞ்சீவ் ‘இப்போது சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால், இளம் வயசுல எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கல. அதை நினைச்சு நிறைய தடவை கண்ணாடி முன்னாடி நின்னு அழுதிருக்கேன். நிலாவே வா படத்தில் என் நண்பன் விஜயுடன் நடிச்சப்ப ‘நீ நல்லா நடிகனா வருவே’ன்னு என் அம்மா சொன்னாங்க.
நான் சினிமாவில் ஒரு பெரிய நடிகனா வருவேன்னு என் அம்மாவும் அப்பாவும் ஆசைபட்டாங்க. ஆனால் அது அவங்க சாகுற வரைக்கும் நடக்காமலே போயிடுச்சு.. அவங்க ஆசையை நிறைவேற்ற முடியல என்கிற வருத்தமும், கவலையும், வலியும் இப்பவும் எனக்கு இருக்கு’ என கண்ணீர் மல்க பேசி இருக்கிறார் சஞ்சீவ்.
