சிங்கப்பெண்ணே: கர்ப்பிணிப் பெண்ணைத் திட்டிய மரகதம்... ஆனந்தியோட நிலைமை என்ன ஆகப்போகுதோ?

சிங்கப்பெண்ணே: ஆனந்தியைக் கட்டிக்கப் போறவன்னு சுயம்பு சொன்னதும் கோபத்தில் அவன் சட்டையைப் பிடிக்கிறான் அன்பு. அதைப் பார்த்த சேகர் ஆத்திரத்தில் அன்புவின் சட்டையைப் பிடிக்கிறான். அப்புறம் சுயம்பு விடுடா அவன் நம்ம பையன். ஆனந்திக்காக அவனை மன்னிச்சி விட்டுருவோம். அன்னைக்கு பணக்கார தம்பி என் சட்டையைப் பிடிச்சது.
ஆனந்தி அழகா இருக்கால்ல. அதான். நீயும் ஆனந்தி மேல கண்ணா இருக்கியோன்னு கேட்கிறான் சுயம்பு. ஆனா ஆனந்தியைக் கட்டுறதுக்கு எல்லாம் என்னை மாதிரி கெத்து வேணும். அதனாலதான் இல்லன்னா ஆனந்தி பணிஞ்சு போவாளா? என வம்பிழுக்கிறான் சுயம்பு. உங்கிட்டலாம் என்ன பேச்சு. நீ லூசு மாதிரி பேசுவ. வழிய விடுன்னு அன்பு கிளம்புகிறான்.
அழகன் என்ற எம்பிராய்டரி பெயர் போட்ட கர்சீப்பைத் தடவிப் பார்க்கிறாள் ஆனந்தி. அதைப் பார்த்ததும் சௌந்தர்யா இப்படியே காலம் பூராவும் கர்சீப்போடவே காலத்தைக் கழிச்சிடலாம்னு நினைச்சிட்டியா ஆனந்தி? ஒழுங்கா அன்பு அண்ணனோட பேசு. எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும் என்கிறாள் சௌந்தர்யா.
என்ன சொளசௌ நீயும் புரியாமப் பேசுறன்னு கேட்கிறாள் ஆனந்தி. இல்லன்னா நீ அழுதுட்டு வந்த மறுநாளே அன்பு அண்ணன் ஏன் உன் வீட்டு வாசல்ல வந்து நிக்கணும்னு கேட்கிறாள் சௌந்தர்யா. என்ன சொன்னேன்னு ஆச்சரியத்துடன் கேட்கும் ஆனந்தி ஓடிப்போய் வாசலுக்குச் சென்று அன்புவை வரவேற்கிறாள்.
உனக்காக நீ எங்கே போனாலும் நான் வருவேன் என்கிறான் அன்பு. அதுக்கு ஆனந்தி இழுத்துப் புடிச்சி வாழ்க்கையை ஒட்ட வைக்க முடியாதுன்னு ஆனந்தி சொல்கிறாள். அந்த வாழ்க்கையைத் தேடித்தான் நானும் வந்தேன் என்கிறான் அன்பு. அப்போது அங்கு வரும் வைதேகி கணவருடன் சேர்ந்து தூர நின்று அன்புவும், ஆனந்தியும் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.
தம்பி யாருன்னு ஆனந்தி அம்மாவிடம் கேட்கிறாள். ஆனந்தி கூட வேலை பார்க்குற தம்பின்னு அழகப்பனும் அன்புவை மாப்பிள்ளை வீட்டாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்.
ஆனால் வைதேகிக்கு சந்தேகம். இவங்க பேசுறத பார்த்தா சந்தேகமால்ல இருக்கு. ஆனந்தியும் அவன்கூட ரொம்ப ஆசையா பேசுறான்னு சொல்ல அவளது கணவர் அவளை இதெல்லாம் டவுன்ல சகஜம்னு ஆசுவாசப்படுத்துகிறார்.
சௌந்தர்யா எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துட்டு ரெஜினாவிடம் இவங்க எல்லாம் தெரிஞ்சித்தான் பேசுறாங்களா? ஒருவேளை இவங்களுக்கும் அன்புதான் ஆனந்திக்கு சரியான ஜோடின்னு தெரிஞ்சிடுச்சோன்னு கேட்கிறாள். அன்புவுக்கு ஆனந்தி இலை போட்டு பரிமாறிக்கொண்டு இருக்கிறாள். அதைப் பார்க்கும் சௌந்தர்யா இப்ப பாரு வேடிக்கையை என்கிறாள். அவள் எங்க அண்ணனுக்கு நான் தான் பரிமாறுவேன் என குழம்பு ஊற்ற கரண்டியை எடுக்கிறாள்.
அதை அவளிடம் இருந்து நான் தான் பரிமாறுவேன்னு ஆனந்தி அடம்பிடிக்கிறாள். இந்த சண்டையைப் பார்த்து விடுகிறாள் கோகிலா. வாங்க மாப்பிள்ளை. எப்ப வந்தீங்க? ஆனந்தி நல்லா கவனின்னு சொல்கிறாள். அன்பு என்ன சொன்னீங்கன்னு கேட்கிறான். நான் சாப்பிட்டேன் மாப்பிள்ளைன்னு சொல்கிறாள் கோகிலா. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் ஆனந்தியைக் கட்டப்போற புதுமாப்பிள்ளை நீங்கதானேன்னு சொல்கிறாள் கோகிலா.
அதற்கு சௌந்தர்யா அண்ணன் ரெடியா தான் இருக்கு. அதுக்கு ஆனந்தியும் சரின்னு சொன்னா புதுப்பொண்ணு, புதுமாப்பிளையா மாத்திடலாம்னு சொல்கிறாள். அதற்கு கோகிலா அவ தான் அன்புவோட அழகுல மயங்கி எப்படா எப்படான்னு இருக்காளே என்கிறாள் கோகிலா. உடனே ஆனந்தி கோகிலாக்கா இந்தப் பேச்சு இப்ப முக்கியமா? சாப்பிடுங்க அன்பு என சொல்கிறாள்.
சரி சரி. உங்க சந்தோஷத்தை நான் கெடுக்கலன்னு கோகிலா போகிறாள். எல்லாருக்கும் புரியுது. ஆனந்திக்கு மட்டும்தான் புரிய மாட்டேங்குதுன்னு அன்பு சொல்கிறான். அப்போது அங்கு வரும் பக்கத்து வீட்டு பெண் தாரணி இது யாருன்னு விசாரிக்கிறாள். ஆனந்தி கூட வேலை பார்க்கிறவங்கன்னு சொன்னதும், ஆனந்திக்கும், உங்களுக்கும் பழக்கம் எப்படின்னு அன்புவைப் பார்த்துக் கேட்கிறாள். உடனே ஆனந்தி அவளை ஏன் தாரணி அக்கா இப்படி எல்லாம் கேட்குறீங்கன்னு சொல்கிறாள்.
இல்ல. இந்தக் காலத்துப் பசங்க தேவை இல்லாமலா பழகுறாங்கன்னு சொல்லியபடி சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தபடி செல்கிறாள். அப்போது அன்புவிற்கு புரையேறுகிறது. ஆனந்தி அவன் தலையைத் தட்டி தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறாள். அதை தூர நின்று பார்த்து விடும் தாரணி, புரையேறுனா தண்ணி கொடுக்குறது சரி. தலையை வேற தட்டுறாளே ஆனந்தி. இது சரியில்லையேன்னு மனதுக்குள் சொல்கிறாள்.
அப்போது அந்தத் தெருவில் ஒரு வீட்டு வாசலில் அபலைப் பெண் ஒருத்தி கர்ப்பமாக வந்து நின்று பிச்சை கேட்கிறாள். பாப்பாவுக்கு பசிக்குதும்மா. சோறு போடுன்னு சொல்கிறாள். ஏய் உன்னைத் தான் ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிருக்குல்ல. அப்புறம் ஏன் வந்தேன்னு விளக்குமாற்றால் அவளை அடித்து விரட்டுகிறாள் அந்த வீட்டுப் பெண்.
அடுத்ததாக அந்தக் கர்ப்பிணி ஆனந்தியின் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கிறாள். அப்போது ஆனந்தி போட்ட எச்சில் இலையை எடுக்கிறாள். ஐயோ இதுல சாப்பாடு இல்லையே என்கிறாள். ஆனந்தி அதைக் கீழே போடுன்னு சொல்கிறாள். சாப்பாடு கொடுத்தா தப்பா நினைப்பாங்களேன்னு யோசிக்கிறாள். புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணா இருக்காளேன்னு பரிதாபப்படுகிறாள் ஆனந்தி.

அப்போது பக்கத்து வீட்டுப் பெண் மரகதம் வருகிறாள். அவளை விரட்டுகிறாள். ஐயோ பாவம் என்கிறாள் ஆனந்தி. இவ பாவம் இல்லை. கேடு கெட்டவ. யாருக்கிட்டேயோ பழகி வயித்துல புள்ளைய வாங்கிட்டு வந்துருக்கா. இவளை ஊரே ஒதுக்கி வச்சிருக்கு. ஊருல இருக்குற மத்தப் பொண்ணுங்களும் இவளைப் பார்த்து கெட்டுப் போவாங்கன்னு சொல்கிறாள் மரகதம்.
பாவம் பசிக்குதுன்னு தானே கேட்குது. அதுக்கு சாப்பாடு போடுறதுல என்ன தப்புன்னு ஆனந்தியின் அம்மாவும் கேட்கிறாள். அதற்கு மரகதம், இன்னைக்கு இவளை தள்ளி வைக்காவிட்டால், நாளைக்கு ஊருல இருக்குற எல்லா வயசுப் பொண்ணுகளும் தறிகெட்டு அலைவாங்க. ஊர் மானம் கப்பல் ஏறிடும். வயசு இருக்குறப்பவே பக்குவமா இருக்கணும். இல்லாம ஆட்டம்போட்டா இப்படித்தான் இருக்கணும்னு மரகதம் சொல்லச் சொல்ல ஆனந்திக்குத் தன்னையேக் குத்திக் காட்டுவது போல தெரிந்தது.