ரஜினியை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்?!.. அட எல்லாமே மாறிப்போச்சே!…
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. பல வருடங்களாக பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் சூப்பர்ஸ்டார் பதவிக்குதான் தற்போது சில நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாகவே இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
ஒருபக்கம் விஜய்தான் சூப்பர்ஸ்டார் எனவும் திரையுலகினர் பேச துவங்கிவிட்டனர். எனவே, எப்படியாவது ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுத்து தன்னுடைய சூப்பர்ஸ்டார் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் ரஜினி இருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிபெற வைக்க படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. இது ரஜினியின் 170வது திரைப்படமாகும்.
ஒருபக்கம், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அந்த படத்திற்கு முன்பே அதாவது ரஜினியின் 171வது திரைப்படத்தை கைப்பற்ற வாரிசு படத்தை தயாரித்த தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில்ராஜு முயற்சி செய்து வருகிறார். மேலும், தெலுங்கில் சில மசாலா படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிந்திராவை இயக்க வைக்கலாம் என்கிற திட்டமும் இருக்கிறதாம். இவர் சிரஞ்சீவிக்கு ஹிட் அடித்த வால்டர் வீரய்யா படத்தை இயக்கியவர். மேலும், ரவி தேஜாவை வைத்து சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்தால் அவரின் 171வது படமாக இது அமையும். 172வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனத்தெரிகிறது.
ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!…