Cinema History
தை மகளை உள்ளங்கனிய வரவேற்ற சூப்பர்ஹிட் தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை
இன்று தைத்திருநாள் தரணியெங்கும் உள்ள தமிழர்பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் தமிழ்ப்படங்களும் தைமகளை உச்சிமுகர்ந்து வரவேற்கின்றன. அவற்றில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு…
ஆஹா தை பிறந்தது…
ஆஹா தை பிறந்தது…ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது…பொங்கலும் பொங்குதடி…என்று ஒரு அற்புதமான பொங்கல் சிறப்புப் பாடல் கட்டளை படத்தில் இடம்பெறும். புரட்சித்தமிழன் சத்யராஜ் நடித்த சூப்பர்ஹிட் படம் இது.
இந்தப் பாடலில் பொங்கல் பண்டிகையைப் பற்றி பாடலின் தொடக்கத்தில் சரணம் ஒன்று வரும்.
அதில் பழைய குப்பை எல்லாம் போகியிலே எரிக்கணும்..புதிய வெளிச்சம் தான் பூமியிலே பொறக்கணும்…வெளஞ்ச நெல்மணி தான் வீடு வந்து சேரணும்..ஒழைச்ச ஒழைப்பெல்லாம் அறுவடையில் பார்க்கணும்…என்று வரிகள் வரும். இதுதான் பொங்கல் பண்டிகையின் நோக்கம். இதுவே தைமகளை நாம் வரவேற்கும் சரணம்.
தைப்பொங்கலும் வந்தது… பாலும் பொங்குது
தைப்பொங்கலும் வந்தது… பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ…1994ல் இளையராஜாவின் இசைமழையில் கே.எஸ்.சித்ரா பாடிய பாடல். மகாநதி என்ற இந்தப் படத்தில் உலகநாயகன் கமல் நடித்துள்ளார்.
இந்தப் பாடலில் மகாநதி, காவேரி போன்ற நதிகளால் தான் நாடு செழிப்பாகிறது…என்ற சேதியைச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடலில் பொங்கல் பண்டிகையின் அம்சங்களான வாழை, கரும்பு, நெல் போன்ற விவசாயிகளின் விளைபொருள்களைப் பற்றி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
செவ்வாழை செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்…என்ற வரிகள் உணர்த்துகின்றன.
தைபொறக்கும் நாளை…விடியும் நல்ல வேளை…
இந்தப்பாடல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் இடம்பெறுகிறது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் நடித்துள்ளார். படம் வெளியான பொங்கல் களைகட்டியது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை வரவேற்றுக் கொண்டாடினர்.
படத்தில் பொங்கல் பற்றிய அற்புதமான பாடலை ரஜினியும், மம்முட்டியும் இணைந்து ஆடிப் பாடுவர். அதுதான் காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்ற பாடல்.
இந்தப் பாடலில் தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை…பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம்….அச்சுவெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான்…ஹோய் என்று ஒரு வரி முத்தாய்ப்பாக வரும். பொங்கல்னா இதுதாம்பா என நச்சென்று சொல்லும் வரிகள் இவை. இப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் நமக்குள் உற்சாகம் பீறிட்டெழும்.
பொங்கல பொங்கல வைக்க…
பொங்கல பொங்கல வைக்க…பாடல் ….எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல…அதான் வருஷம் 16. நவரச நாயகன் கார்த்திக், குஷ்பூ நடித்த சூப்பர்ஹிட் படத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. பொங்கலை சிறப்பிக்கும் பாடல் இடம்பெற்ற படங்களில் இதுவும் ஒன்று.
பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…பூப்பூக்கும் மாசம்…தை மாசம்..ஊரெங்கும் வீசும்…பூ வாசம் என்று பாடல் தை மகளின் வருகையை வெகு அழகாகப் பறை சாற்றுகிறது.
தை பிறந்தால் வழிபிறக்கும்…
தை பிறந்தால் வழிபிறக்கும் பாடலும் இதுதான். படத்தின் பெயரும் இதுதான்…
டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய இனிமையான பழைய பாடல். இந்தப் பாடல எழுதியவர் மருதகாசி. கே.வி.மகாதேவன் இசையில் மனதைக் கவ்வும் பாடல் இது.
இந்தப்பாடலின் ஆரம்பமே களைகட்டுகிறது. தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்…தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்…என்று வருகிறது.
நெற்பயிர் எப்படி எல்லாம் விதைக்கப்பட்டு வளர்ந்து அதை அறுவடை செய்கிறோம் என்ற விவரத்தை ரத்தினச் சுருக்கமாகத் தாளநயத்துடன் பாடலாகத் தரப்பட்டுள்ளது. இந்தப் பாடல் அக்கால உழவர்களின் தேசிய கீதமாகத் திகழ்ந்தது.