Cinema News
“இவனை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளு”… வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட தம்பி ராமையா…
தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தம்பி ராமையா. இவர் “மைனா” என்ற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் “மனு நீதி”, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
சினிமா ரசிகன்
தம்பி ராமையாவுக்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. பள்ளிப் பருவத்தில் கலை நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆர்வம் கொண்ட தம்பி ராமையா சொந்தமாகவே பாட்டெழுதவும், இசையமைக்கவும் கற்றுக்கொண்டாராம். அதன் பின் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை பார்த்து பூரித்துப்போன தம்பி ராமையா சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு கிளம்பினாராம்.
தேவர் ஃபிலிம்ஸை காப்பாற்றவேண்டும்
சென்னையில் தனது நெருங்கிய உறவினரின் வீட்டில் தங்கிக்கொண்டு பல நாட்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார் தம்பி ராமையா. அப்போது சின்னப்பா தேவரின் மகன் தண்டாயுதபாணி தயாரிப்பில் வெளிவந்திருந்த “அன்னை பூமி 3D”, “நல்ல நாள்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியடைந்தனாவாம்.
தம்பி ராமையா தீவிர முருக பக்தர். தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தாரும் தீவிர முருக பக்தர் என்பதனால் அந்த நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என தம்பி ராமையா நினைத்தாராம். ஆதலால் கிட்டத்தட்ட 4 கதைகளை எழுதி அதனை படமாக எடுத்து தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் தண்டாயுதபாணியை பார்க்கச் சென்றாராம்.
இதையும் படிங்க: ரவிச்சந்திரன் என நினைத்து ஜெய்சங்கரை பாராட்டிய ரசிகர்… என்ன கொடுமை சார் இது…
வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட தம்பி ராமையா
தம்பி ராமையாவை தேவர் ஃபிலிம்ஸின் வாட்ச் மேன் உள்ளே விடவில்லையாம். அப்படியும் பல நாட்களாக தினமும் தேவர் ஃபிலிம்ஸ் கட்டிடத்தின் கேட்டுக்கு வெளியே காத்துக்கொண்டே இருப்பாராம் தம்பி ராமையா. ஒரு நாள் வாட்ச் மேனை காக்கா பிடித்து உள்ளே புகுந்து விடலாம் என முடிவு எடுத்தாராம்.
அதன் படி ஒரு நாள் வாட்ச் மேனின் உறவினர் ஒருவர் தேடி வந்த விசயத்தை அவரிடம் கூற, அப்போது வாட்ச் மேன் லேசாக பேச்சுக்கொடுத்தாராம். “தினமும் இப்படி வந்து நிக்கிறியே. உனக்கு என்ன வேணும்ப்பா?” என கேட்டாராம். அதற்கு தம்பி ராமையா “ஒரு முறையாவது தண்டாயுதபாணி சாரை பார்த்துவிடவேண்டும். நான் 4 கதைகள் எழுதியிருக்கிறேன்” என கூறினாராம்.
அப்போது அந்த வாட்சமேன் “சரி, நேரா உள்ள போய் உட்காரு. யாராவது வந்து அப்பாய்ண்ட்மன்ட் இருக்கான்னு கேட்பாங்க. நீ இருக்குன்னு சொல்லிடு” என யோசனை கூறினாராம். அதன்படி நேராக உள்ளே சென்ற தம்பி ராமையா அங்கு போட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டாராம். அப்போது ஒரு நபர் அங்கே வந்து “யார் நீங்கள்?” என கேட்டிருக்கிறார். அதற்கு தம்பி ராமையா “நான் தண்டாயுதபாணி சாரை பார்க்க வந்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
“அப்படியா! அப்பாய்ண்ட்மன்ட் இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார். தம்பி ராமையாவும் தைரியமாக “அப்பாய்ண்ட்மன்ட் இருக்கிறதே” என கூறியிருக்கிறார். “தண்டாயுதபாணியே அப்பாய்ண்ட்மன்ட் கொடுத்தாரா?” என கேட்டிருக்கிறார். அதற்கு தம்பி ராமையா “ஆமாம்” என கூறியிருக்கிறார்.
உடனே அந்த நபர் வாட்ச்மேனை அழைத்து “இந்த ஆள கழுத்த பிடிச்சி வெளியத் தள்ளு” என கூறினாராம். உடனே அந்த வாட்ச்மேன் ஓடி வந்து தம்பி ராமையாவை வெளியே அழைத்து சென்றுவிட்டாராம்.
அப்போது தம்பி ராமையா “நீங்க சொன்ன மாதிரிதானே சொன்னேன். எதுக்கு அவர் என்னை வெளியே போ” என்றார் என கேட்டிருக்கிறார். அதற்கு வாட்ச் மேன் “உன்னைய வெளியே போக சொன்னாரே. அவர்தான் தண்டாயுதபாணி” என கூறினாராம். இதனை ஒரு பேட்டியில் மிகவும் கலகலப்பாக கூறியிருந்தார் தம்பி ராமையா.