பாலச்சந்தர் - இளையராஜா சண்டை வந்தது அந்த படத்தில்தான்!.. என்னப்பா சொல்றீங்க?
இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் பாலச்சந்தர், தொடக்க காலகட்டத்தில் தனது திரைப்படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், வி.எஸ்.நரசிம்மன் ஆகிய இசையமைப்பாளர்களை பயன்படுத்தி வந்தார். அதனை தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய “சிந்து பைரவி” என்ற திரைப்படத்தில் இளையராஜாவுடன் கைக்கோர்த்தார் பாலச்சந்தர்.
பாலச்சந்தர்-இளையராஜா
“சிந்து பைரவி” திரைப்படத்தை தொடர்ந்து “புன்னகை மன்னன்”, “மனதில் உறுதி வேண்டும்”, “உன்னால் முடியும் தம்பி”, “புது புது அர்த்தங்கள்” போன்ற திரைப்படங்களில் இளையராஜாவுடன் தொடர்ந்து பயணித்தார். ஆனால் “புது புது அர்த்தங்கள்” திரைப்படத்திற்கு பிறகு இளையராஜாவுடன் பாலச்சந்தர் கைக்கோர்க்கவே இல்லை.
“புது புது அர்த்தங்கள்” திரைப்படத்தை தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய “ஒரு வீடு இரு வாசல்” என்ற திரைப்படத்தில் மீண்டும் வி.எஸ்.நரசிம்மனுடன் கைக்கோர்த்தார். அதனை தொடர்ந்து “அழகன்” திரைப்படத்தில் இசையமைப்பாளர் மரகதமணி (எ) கீரவாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர்.
இளையராஜா-பாலச்சந்தர் விரிசல்
இந்த நிலையில் “புது புது அர்த்தங்கள்” திரைப்படத்தின்போது இளையராஜாவிற்கும் பாலச்சந்தருக்கு ஏற்பட்ட விரிசல் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது “புது புது அர்த்தங்கள்” திரைப்படம் 1989 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட பாலச்சந்தர் முடிவு செய்தார். அதே தீபாவளிக்கு, கமல்ஹாசனின் “வெற்றிவிழா”, ரஜினிகாந்த்தின் “மாப்பிள்ளை”, சத்யராஜ்ஜின் “வாத்தியார் வீட்டுப்பிள்ளை”, விஜயகாந்த்தின் “தர்மம் வெல்லும்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருந்ததாம். இந்த அனைத்து திரைப்படங்களுக்கும் இளையராஜாதான் இசை. ஆதலால் மிகவும் பிசியாக இருந்திருக்கிறார்.
அப்போது பாலச்சந்தரிடம் இளையராஜா, “நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். என்னால் உங்கள் படத்திற்கு இப்போதைக்கு பின்னணி இசையை அமைத்துத் தர முடியாது” என கூறியிருக்கிறார். ஆனால் இளையராஜா ஏற்கனவே “புது புது அர்த்தங்கள்” திரைப்படத்திற்கான பாடல்களை ரெக்கார்டு செய்துவிட்டார். பாலச்சந்தரோ எப்படியாவது தனது படத்தை தீபாவளிக்கு வெளியிட்டுவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.
ஆதலால் தனது “புது புது அர்த்தங்கள்” படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்களில் இடம்பெற்ற சின்ன சின்ன இசைக்கோர்வைகளை பின்னணி இசையாக எடுத்துப்போட்டு தன் திரைப்படத்தை வெளியிட்டாராம் பாலச்சந்தர். இந்த சம்பவத்தில் இருந்துதான் இளையராஜாவிற்கும் பாலச்சந்தருக்கு விரிசல் ஏற்பட்டதாம்.