அட்லிக்கும் வெற்றிமாறனுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?.. அங்கதான் ஒரு டிவிஸ்ட் இருக்கு…
தமிழ் சினிமாவின் முன்னணி கம்மெர்சியல் இயக்குனராக வலம் வந்த அட்லி, தற்போது பாலிவுட்டில், ஷாருக்கானை வைத்து “ஜவான்” படத்தை இயக்கி வருகிறார். தமிழ்நாட்டில் அட்லிக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவரது திரைப்படங்கள் அனைத்தும் மசாலா திரைப்படங்கள் என்றாலும் மிகவும் நேர்த்தியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக திரைக்கதையை உருவாக்குவார்.
அட்லி மீதான விமர்சனங்கள்
எனினும் அட்லி மீது இரண்டு விதமான விமர்சனங்கள் உண்டு. ஒன்று அவர் பல திரைப்படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்பது. இரண்டாவது அவர் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை இயக்கி முடிக்கமாட்டார், திட்டமிடாமலேயே பட்ஜெட்டை அதிகரித்துவிடுவார் என்பது.
வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இத்திரைப்படமும் குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் படமாக்கமுடியவில்லை என்பதால் பட்ஜெட் அதிகரித்தது. இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “சின்ன பட்ஜெட் படமாக தொடங்கி தற்போது இரண்டு பாகங்களாக வெளிவரும் “விடுதலை” படம் மாதிரி அட்லியோ வேறு ஒரு இயக்குனரோ செய்திருந்தால் அவர்கள் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார்கள். ஆனால் வெற்றிமாறன் மீது யாரும் அது போல் விமர்சனம் வைக்கவில்லையே. ஏன்?” என்று கேட்டிருந்தார்.
வெற்றிமாறனுக்கும் அட்லிக்கும் உள்ள வித்தியாசம்
அந்த நேயரின் கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “அட்லிக்கும் வெற்றிமாறனுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சுட்டிக்காட்டவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அட்லியை பொறுத்தவரை ஒரு சிறந்த இயக்குனர். அனால் எதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் ஒரு திரைப்பட தயாரிப்பு அடங்கவேண்டும். உதாரணத்திற்கு 110 கோடியில் ஒரு படம் உருவாகவுள்ளது என்றால் மிஞ்சிப்போனால் 120 கோடி கூட பட்ஜெட் கூடலாம். ஆனால் 160 கோடி ஆகிவிட்டால் அந்த தயாரிப்பாளரின் நிலை என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதன் காரணமாகாத்தான் அட்லியை பலரும் விமர்சனம் செய்கிறார்கள்” என கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர், “வெற்றிமாறனுடைய நிலைமை வேறு. வெற்றிமாறன் படத்திலும் பட்ஜெட் அதிகரித்தது என்றாலும், அந்த படத்தை இரண்டு பாகமாக அல்லவா அவர் எடுக்கிறார். அப்படி பார்த்தால் அந்த தயாரிப்பாளருக்கு அதில் லாபம்தானே” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.