Cinema News
சபதத்தில் ஜெயித்து காட்டிய கவுண்டமணி!.. சோலோவாக பின்னி பிடலெடுத்த படங்கள்!..
தமிழ் சினிமாவில் இன்று வரை யாராலும் மறக்க முடியாத நகைச்சுவை ஜோடி என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். 80கள் காமெடியின் டிரெண்ட் செண்டர் என்றே கூறலாம். கவுண்டமணி , செந்திலை வேறு யாருடனும் கூட்டு சேர்த்து பார்க்க முடியாது. அவர்கள் ஒன்றாக இருந்தால்தான் அது சினிமாவிற்கு நல்லது என்ற நிலைமையை உருவாக்கி விட்டு சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு ஈடு இணை இன்று வரை யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரு கட்டத்தில் செந்தில் விளையாட்டாக கவுண்டமணியிடம் ‘நான் இல்லைன்னா காமெடி பண்ணமுடியாது’ என லூஸ் டாக் விட ‘சரி நீ தனியா பண்ணு, நான் தனியா பண்றேன்’ என்று கவுண்டமணி அதிரடியான முடிவு எடுக்க அதில் ஜெயித்தாரா என்பது தான் டிவிஸ்ட். ஆனால் செந்தில் இல்லாமல் கவுண்டமணி நடித்த பெரும்பாலான படங்கள் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கின்றன. அப்படிப் பட்ட படங்களைத் தான் பார்க்க இருக்கிறோம்.
சிங்காரவேலன் : கவுண்டமணி எப்பொழுதுமே சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோர்களின் கூட்டிலேயே பயணம் செய்பவர். ஆனால் இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து அதுவும் நகர வாழ்க்கையில் கமல் வரும் போது அவருடன் இணைந்து காமெடி பண்ணும் கவுண்டமணி அதிகமாகவே ஸ்கோர் செய்திருப்பார். அதுமட்டுமில்லாமல் பெண்களை கேலி செய்வது மாதிரியான பல வசனங்கள் இருப்பினும் அது பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.
மேட்டுக்குடி : கார்த்திக் கவுண்டமணி காம்போ ஏற்கெனவே உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் மிகவும் ஈர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தில் நக்மாவின் தாய்வழி மாமாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பார் கவுண்டமணி. நக்மாவை காதலிக்க கார்த்திக்கிடம் கவுண்டமணி ஐடியா கேட்பதிலிருந்து ஜெமினிகணேசனிடம் மாட்டிக் கிட்டு முழிக்கும் காட்சிகள் வரை படமுழுக்க சிரிக்க வைத்திருப்பார் கவுண்டமணி.
காதலர் தினம் : இந்தப் படத்தில் சற்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் நகர பையனாக அதிலும் குறிப்பாக கல்லூரி பேராசிரியராக தோன்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் கவுண்டமணி. அன்பே டயானா’ என்று அவர் சொல்லும் விதமோ அல்லது ஜேகிபோர்டில் அவர் தட்டச்சு செய்யும் விதமோ, கவுண்டமணி எல்லாவற்றையும் நகைச்சுவையாகக் காட்டினார்.
நடிகன் : செந்திலை விட பெஸ்ட் காம்போ என்றால் கவுண்டமணிக்கு சத்யராஜ் தான். எவர் கிரீன் பேர் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி தான். இந்தப் படம் மட்டும் இல்லை. ஏகப்பட்ட படங்களில் சத்யராஜும் கவுண்டமணியும் இணைந்து பல லூட்டிகள் செய்திருக்கின்றனர். அதிலும் இந்தப் படத்தில் மனோரமாவை இருவரும் சேர்ந்து கலாய்ப்பது போன்ற காட்சிகளில் நம்மை பைத்தியமே பிடிக்க வைத்து விடுவார்கள்.
மன்னன் : கவுண்டமணி மற்றும் ரஜினி நடித்த படங்களிலேயே சிறந்த நகைச்சுவை படமாக மன்னன் திரைப்படம் அமைந்திருக்கிறது. இருவரும் கூலி தொழிலாளர்களாக ஒரு ஃபேக்டரியில் வேலையில் இருப்பதில் இருந்து இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசம் இன்றளவு வரை யாராலும் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன. அதிலும் அந்த தியேட்டர் சீனில் விஜயசாந்திக்கு பயந்து கொண்டு இருவரும் சேர்ந்து பம்முவது போன்ற காட்சிகள் யாரையும் சிரிக்க விடாமல் பண்ணாது.