சமையல்காரராக வேலை பார்த்த நடிகர்.. பின்னாளில் டெர்ரர் வில்லன்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த கேரளாவைச் சேர்ந்த அந்த வாலிபர் ஊட்டியில் தனது சகோதரியின் கணவரின் தயவில் வசித்துவந்தார். சகோதரியின் கணவர் ஊட்டியில் சொந்தமாக தேநீர் கடை வைத்து நடத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வியாபாரம் படுத்தது.
இவர்களுக்கு ஏன் நாம் பாரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த வாலிபர், நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை என்பவரின் நாடகக்குழுவில் சேர்ந்தார். ஆனால் அந்த நாடகக்குழுவில் அவர் நடிகராக சேரவில்லை. அங்குள்ள நடிகர்களுக்கு சமைத்துப்போடும் சமையல்காரரின் உதவியாளராக பணிபுரிந்தார். மூன்று வேளையும் சாப்பாடு உண்டு, ஆனால் சம்பளம் கிடையாது.
நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சம்பளம். இந்த நிலையில் அந்த வாலிபர் தான் எப்போது இந்த நாடகத்தில் நடிப்போம் என ஏங்கியவாறே அந்த நாடகங்களை பார்த்துக்கொண்டிருப்பாராம். அதன் பின் மெல்ல மெல்ல அவருக்கு அந்த நாடகக்குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் “ராமதாஸ்” என்று ஒரு நாடகத்தை அந்த நாடக்குழு அரங்கேறியது. அந்த நாடகத்தை படமாக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையை அணுகினார். அப்போது ராஜமாணிக்கம்பிள்ளை “தாராளமாக படமாக்குங்கள். ஆனால் இந்த நாடகத்தில் நடித்த நடிகர்களைத்தான் அந்த படத்திலும் நடிக்க வைக்க வேண்டும்” என்று கூறினாராம். அந்த நாடகத்தில் அந்த வாலிபரும் நடித்திருந்ததால் அவருக்கு அத்திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்படித்தான் அந்த வாலிபர் “பக்த ராமதாஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் திரைப்படங்களில் டெரர் வில்லனாக நடித்த எம்.என்.நம்பியார்.