அடக்கி ஆளுது முரட்டுக்காளை....குரலால் அடக்கி ஆண்ட மலேசியா வாசுதேவன்..!
ஒரு காலகட்டத்தில் பாடகர்கள் ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தபடி இருந்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றாலே அவரது குரலுக்கு எல்லோருமே அடிமையாகி விடுவார்கள். அவரது சக பாடகராக வந்த மனோ அப்போது பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடினார்.
இருந்தாலும் எஸ்.பி.பி.யால் அவரது குரல் அந்த அளவு பிரபலமாகவில்லை. அதே போல கே.ஜே.யேசுதாஸின் குரல் வசீகரம் நிறைந்தது. அவரது சகபாடகர் தான் ஜெயச்சந்திரன். அவர் எத்தனையோ நல்ல பாடல்கள் பாடியுள்ளார். இருந்தாலும் அந்த யேசுதாஸின் வசீகரக்குரலுக்கு அப்புறம் தான் ஜெயச்சந்திரனின் குரல் கவனிக்கப்பட்டது. அதே போல் இவர்களில் இருந்து மிகவும் வித்தியாசமான பாடகர் மலேசியா வாசுதேவன். மேலே சொன்ன இரு பாடகர்களையும் பின்னுக்குத் தள்ளியது போல் இவரை தள்ள முடியவில்லை. ஏனென்றால் இது மந்திரக்குரல். பல மாயவித்தைகள் செய்யக்கூடியது. சுண்டி இழுக்கும் வசீகரம் நிறையவே உண்டு.
தனித்துவமான அந்தக் குரலை ரசிகர்கள் மதிமயங்கிக் கேட்டனர். ஆனால் கொண்டாடவில்லை. தற்போது பேர் வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் 2கே கிட்ஸ் வரை கொண்டாடப்பட்டு வருவதை டிவி சானல்களில் பார்க்கலாம். அவருடைய குரலின் பரிமாணங்கள் வியக்கத்தக்கது.
அவரது குரலில் ஒரு தனி அம்சம் உண்டு. அதில் ஒரு கொண்டாட்டம் தென்படும். அதற்காகவே அவருக்கு பல குத்துப்பாடல்களையும், கொண்டாட்டப் பாடல்களையும் தந்தனர். அதே நேரம் பக்திப்பரவசத்துடனும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
அடக்கி ஆளுது முரட்டுக்காளை....நெஞ்சுக்குள் அச்சமில்லை, யாருக்கும் பயமுமில்லை, வாராதோ வெற்றி நிச்சயம்...என கம்பீரமாகப் பாடும்போது நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே நிஜமாகப் பாடியது போல இருக்கும். அதே போல ஆசை 100 வகை, சிங்கமொன்று புறப்பட்டதே ஆகிய பாடல்களைக் கேட்கும்போது நமக்குள் ஒரு புது தெம்பு கிடைக்கும்.
தமிழில் மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். இவரது குரலை யதார்த்தம் இருக்கும். அதனால் நமக்குள் நெருங்கி விடுகிறார். ஒரு பாடலைக் கேளுங்கள். குழல் வளர்ந்து அலையானதே...இரவுகளின் இழையானதே... விழியிரண்டு கடலானதே... எனது மனம் படகானதே.... எனக்குத் தானே....என்ற அந்தப் பாடல் நமக்குள் இப்போதும் முணுமுணுக்க வைக்கும் ரகம். பூவே...இளைய பூவே...எவ்வளவு அழகான பாடல்...என்ன ஒரு வசீகரக் குரல் என்று நம்மை உருகச் செய்துள்ளார் மலேசியா வாசுதேவன்.
கண்ணாடி போட்டுக்கொண்டு, அகன்ற தலையுடன் வில்லன் வேடத்தில் ஒரு கைதியின் டைரியில் கமலுடன் நடிக்கையில் நமக்குள் அவரது நடிப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
பலரது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட சோகப்பாடல்களையும், மெலடிப் பாடல்களையும், குத்துப்பாடல்களையும் கொடுத்தவர் மலேசியா வாசுதேவன்.
நடிகர் திலகம் சிவாஜியின் முதல் மரியாதை படத்தில் பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம் என 2 சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்திருப்பார். தர்மயுத்தம் படத்தில் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, விடியும் வரை காத்திரு படத்தில் நீங்காத எண்ணம் ஒன்று, தூறல் நின்னு போச்சு படத்தில் தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி, நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே, கிழக்கே போகும் ரயில் படத்தில் கோவில் மணி ஓசை தன்னை என நெஞ்சை நெகிழச் செய்யும் பாடல்கள் இவரது குரலுக்குச் சொந்தம் கொண்டாடின.
அது ஒரு வியப்பான விஷயம். 1985ல் பாக்யராஜின் சின்னவீடு படமும், பாரதிராஜாவின் முதல் மரியாதை படமும் வருகிறது. இரண்டிலும் ஒரே சூழல். ஆனால் வேறு வேறு காட்சி அமைப்புகள்.
பாக்யராஜ் தன் குண்டான மனைவியை விட்டு வேறொரு பெண் மீது காதல் கொள்கிறார். ஆனால் சிவாஜி பாடும் பாட்டிற்கு ராதா எசப்பாட்டு பாடுகிறார். இருவருக்கும் இளையராஜா இசையைத் தனித்தனியாகப் போட்டார். மலேசியா வாசுதேவனின் குரல் அதைத் தெளிவாகப் பிரித்துக் காட்டியது. ஏ...குருவி என்றது முதல் மரியாதை.
சிட்டுக்குருவி வெட்கப்படுது என்றது சின்ன வீடு. எப்படி இருக்கு என்று பாடலை ஒருமுறைக்கு இருமுறை ரசனையுடன் கேட்டுப் பாருங்க. பிரமித்து விடுவீர்கள். இளையராஜா மலேசியா வாசுதேவனை தனது இசை ரசனைக்கு ஏற்ப நல்ல முறையில் பயன்படுத்தியிருப்பார்.
ஏ...ராசாத்தி....என்ற பாடலில் மலேசியா வாசுதேவன் பல விதமான பரிமாணங்களில் தனது குரலை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டுப் பாடலைச் சொல்லலாம். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியும், சத்யராஜூம் இணைந்து போட்டிப் போட்டுப் பாடும் என்னம்மா கண்ணு சௌக்யமா..? பாடலை இப்போதும் ஒரு துள்ளலுடன் ரசித்துக் கொண்டாட முடியும்.