Connect with us
MGR and Kannadasan

Cinema History

தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்.. ஆனா சண்டை போட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்..

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் கவியரசர் கண்ணதாசனும் மிக நெருங்கி பழகி வந்தவர்கள். பல ஹிட் பாடல்களை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர் கண்ணதாசன். இருவரும் பல காலம் ஒன்றாக சேர்ந்து பயணித்தனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் இருவருக்குள்ளும் ஒரு பெரிய விரிசல் விழுந்தது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

ஒரு முறை எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் பேசிக்கொண்டிருந்தபோது “வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை என்று ஒரு தம்பி இருந்திருக்கிறார். அவரும் வெள்ளையர்களை எதிர்த்து போராடியவர்தான். அவரது கதை மிக சுவாரஸ்யமானது” என்று ஊமைத்துரையின் வாழ்க்கை குறிப்புகளை எம்.ஜி.ஆரிடம் கூறியிருக்கிறார் கண்ணதாசன்.

MGR and Kannadasan

MGR and Kannadasan

எம்.ஜி.ஆருக்கு அந்த கதை பிடித்துப்போக “கவிஞரே, நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன். நீங்களே இந்த படத்தை தயாரிச்சி இயக்கிடுங்க. ஊமைத்துரையாக நான் நடிக்கத் தயார்” என கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர் போன்ற ஒரு டாப் ஹீரோ அவரே வந்து கால்ஷீட் தருவதாக கூறியதால் கண்ணதாசனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லையாம்.

இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் கால்ஷீட் தருகிறார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவியது. அப்போது சிங்கார செட்டியார் என்ற ஃபைனான்சியர், கண்ணதாசனுக்கு ஃபைனான்ஸ் செய்வதாக கூறினாராம். அதன் பிறகு “கண்ணதாசன் புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் புரொடக்சன் கம்பெனியை தொடங்குகிறார் கண்ணதாசன். ஆனால் புரொடக்சன் கம்பெனிக்கு அலுவலகம் வேண்டுமே? ஆதலால் வாடகைக்கு அலுவலகம் எதாவது கிடைக்குமா என தேடலில் ஈடுபடுகிறார் கண்ணதாசன்.

Kannadasan

Kannadasan

அப்போது ஃபைனான்சியர் சிங்கார செட்டியார், கண்ணதாசனிடம் “எனது அலுவலகத்திலேயே ஒரு அறையை எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறியிருக்கிறார். அலுவலக வாடகையும் மிச்சம், அலுவலகத்துக்கு சேர், டேபிள் போன்ற பொருட்களையும் வாங்கத் தேவையில்லை, அந்த பொருட்கள் எல்லாம் ஏற்கனவே சிங்கார செட்டியார் ஆஃபீஸில் இருக்கிறது. ஆதலால் நமக்கு செலவு மிச்சம் என்ற எண்ணத்தில் கண்ணதாசனும் “சரி” என்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

ஆனால் சிங்கார செட்டியாருக்கோ வேறு ஒரு எண்ணம் இருந்திருக்கிறது. அதாவது படத்திற்கான வேலை ஒழுங்காக நடக்கிறதா? என்பதை அருகில் இருந்து கண்காணிக்கவே அவர் கண்ணதாசனுக்கு தனது அலுவலகத்திலேயே அறை போட்டுக்கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு கண்ணதாசன், சிங்கார செட்டியாரின் அலுவலகத்தில் ஆஃபீஸ் போட்டு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்த பிறகு இத்திரைப்படத்திற்கு “ஊமையன் கோட்டை” என பெயர் வைக்கப்பட்டது. கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும் அப்போது திமுகவில் இருந்ததால் “ஊமையன் கோட்டை” திரைப்படத்தின் துவக்க விழாவுக்கு அறிஞர் அண்ணாவை அழைத்திருந்தார். அண்ணாவும் அந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Oomaiyan Kottai

Oomaiyan Kottai

இதனை தொடர்ந்து திரைப்படத்திற்கான பணிகள் விறுவிறுவென நடைபெற்றது. அப்போது அத்திரைப்படத்தில் ஊமைத்துரை கதாப்பாத்திரத்திற்காக எம்.ஜி.ஆருக்கு தேவையான தோப்பா முடியையும் உடைகளையும் தயார் செய்ய வேண்டியதாக இருந்தது. இதனை தயார் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் அத்திரைப்படத்தின் மேக்கப் மேனாக பணிபுரிந்த ரங்கசாமி என்பவர் சிங்காரச் செட்டியாரிடம் சென்று அதற்கான பணத்தை கேட்டிருக்கிறார். அதற்கு சிங்காரச் செட்டியார் 15 நாட்களாக “இதோ தருகிறேன், அதோ தருகிறேன்” என இழுத்தடித்திருக்கிறார்.

இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த ரங்கசாமி, நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று “இவ்வாறு சிங்கார செட்டியார் பணம் தரமாட்டிக்கிறார்” என புகார் கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர் சிங்கார செட்டியாரை அழைத்து இது குறித்து கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதன் பிறகு எம்.ஜி.ஆர், தான் இந்த படத்தில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துவிட்டாராம்.

MGR

MGR

சிங்கார செட்டியாரும் எம்.ஜி.ஆரும் சண்டை போட்டுக்கொண்ட விஷயம் கண்ணதாசனுக்கு தெரிய வர இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை. இதனிடையே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்கள், “கண்ணதாசன்தானே காசு கொடுத்திருக்க வேண்டும். அவர் ஏன் சிங்கார செட்டியாரிடம் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உங்களை அவமானப்படுத்தியுள்ளார் கண்ணதாசன்” என்று கண்ணதாசனுக்கு எதிராக தூபம் போட்டார்களாம். இது எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் மீது கோபத்தை வரவழைத்திருக்கிறது.

Kannadasan

Kannadasan

அதன் பின் கண்ணதாசனை அவமானப்படுத்துவது போன்ற சில விஷயங்களை செய்தாராம் எம்.ஜி.ஆர். இது கண்ணதாசனுக்கு கோபத்தை வரவழைக்க, “தன்மானத்தை விற்று இந்த படத்தை நான் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று முடிவெடுத்த கண்ணதாசன், “ஊமையன் கோட்டை” படத்தை நிறுத்திவிட்டாராம். இவ்வாறு சிங்கார செட்டியார் செய்த தவறுக்கு எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே விரிசல் விழுந்திருக்கிறது.

 

இதையும் படிங்க: மணிவண்ணன் என் கதையை திருடிட்டான் என மணிவண்ணனிடமே வந்து புகார் கொடுத்த கதாசிரியர்… ஏன்ப்பா இப்படி??

google news
Continue Reading

More in Cinema History

To Top