Cinema History
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு இத்தனை தடங்கல் வந்ததா?? என்னப்பா சொல்றீங்க!!
1959 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, ராகினி ஆகியோரின் நடிப்பில் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்”. இத்திரைப்படத்தை குறித்த அறிமுகம் சினிமா ரசிகர்களுக்குத் தேவையேயில்லை. அந்த அளவுக்கு காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வருகிறது இத்திரைப்படம்.
இதில் சிவாஜியின் நடிப்பை பற்றி நாம் தனியாக கூறத்தேவையில்லை. அந்த அளவுக்கு மிகவும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. இதில் அவர் நடித்தார் என்று கூறுவது கூட அபத்தம். சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும்.
“வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான பின்னணி ஒன்று உண்டு. அதாவது தனது சிறு வயதில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை பார்த்த சிவாஜிக்கு, அன்றில் இருந்துதான் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையே பிறந்ததாம். அதே போல் என்றைக்காவது ஒரு நாள் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நிச்சயமாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்ததாம்.
அதன் பின் வெகுகாலம் கழித்து சிவாஜி மிகப் பெரிய நடிகராக ஆன பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்போது மிகப் பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்த சக்தி கிருஷ்ணசாமி என்ற எழுத்தாளரை அழைத்து “வீரபாண்டிய கட்டபொம்மன்” வரலாற்றை நாடகமாக வடிவமைக்கச் சொன்னாராம்.
அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்தார் சிவாஜி கணேசன். அந்த நாடகத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிகவும் பிரம்மித்துப்போன இயக்குனர் பி.ஆர்.பந்துலு, சிவாஜியிடம் சென்று இந்த நாடகத்தை நான் படமாக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன், நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம். அதற்கு சிவாஜி கணேசனும் ஒப்புக்கொண்டார். இவ்வாறுதான் “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற பிரம்மாண்ட படைப்பு உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தின்போது பல தடைகள் எழுந்தனவாம். அதாவது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து ஒரு கதை வெளிவந்துகொண்டிருந்ததாம். அந்த கதையை படமாக்கலாம் என ஆனந்த விகடனின் நிறுவனரும், ஜெமினி ஸ்டூடியோஸின் உரிமையாளாருமான எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டிருந்தாராம்.
அப்போது சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.வாசனை நேரடியாக சென்று சந்தித்து, “நீங்கள் எங்களுக்காக பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தாராம். அதன் பிறகு எஸ்.எஸ்.வாசனும் சரி என்று விட்டுக்கொடுத்துவிட்டாராம்.
அதே போல் அப்போது மிகப் பிரபலமான பத்திரிக்கை ஆசிரியரான ஒருவர் “வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு தெலுங்கர். அவரது படத்தை எப்படி தமிழில் எடுக்கலாம்” என இத்திரைப்படத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தாராம். எனினும் இந்த தடைகளை எல்லாம் தாண்டி “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது.