என்னைய தயவு செய்து எலிமினேட் பண்ணிடுங்க- குக் வித் கோமாளியில் கெஞ்சிய மனோபாலா
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா, கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மனோபாலா ஒரு காமெடி நடிகர் என்ற விஷயம் மட்டுந்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் தமிழில் பல வெற்றித்திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் என்பதை சிலர் மட்டுமே அறிந்திருப்பார்கள்.
மனோபாலா விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் கன்டெஸ்டென்ட்டாக கலந்துகொண்டார். ஆனால் சில வாரங்களிலேயே மனோபாலா எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மனோபாலா, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்தான காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் நன்றாக அசைவ உணவுகளை சமைப்பேன். எல்லா நாடுகளையும் சேர்ந்த உணவுகள் எனக்கு சமைக்க தெரியும். அதனை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் என்னை குக் வித் கோமாளியில் இருந்து அழைத்தார்கள்.
அங்கே சமையலை விட கோமாளித்தனம் செய்தால்தான் நிலைக்க முடியும் என தெரியவந்தது. ஆதலால் நானே ‘என்னை தயவு செய்து வெளியே அனுப்பிவிடுங்கள்’ என அவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி என்னை அவர்களே எலிமினேட் செய்ய வைத்து வெளியே வந்துவிட்டேன்” என மனோபாலா கூறியிருந்தார். இவ்வாறு அவருக்கே பிடிக்காமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து மனோபாலா வெளியே வந்துள்ளதாக தெரிய வருகிறது.