அஜித்தோட அப்பா ஒரு ஜாலி பேர்வழி!.. ரகசியங்களை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன்!...
தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் அப்பா சுப்பிரமணி நேற்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்தார். அவர் இறந்த பின்புதான் அவரது புகைப்படமே சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த அளவுக்கு ஊடக வெளிச்சமின்றி வாழ்ந்தவர். பொதுவாக பிரபல நடிகர்களின் தாய், தந்தையர் பற்றிய செய்திகள், அல்லது புகைப்படங்கள் அல்லது எல்லோரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதாவது வெளியாகி கொண்டுதான் இருக்கும். ஆனால், அஜித் குடும்பம் அதற்கு நேர் எதிரானது.
அஜித்துக்கு இப்படி ஒரு அப்பா இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. முக்கியமாக பெரிய நடிகர்களின் அப்பா என்றால் ‘இவர் என் மகன்’ என தம்பட்டம் அடித்துகொள்வார்கள். ஊடகங்களில் பேட்டி கொடுப்பார்கள். சினிமா விழாக்களில் கலந்துகொண்டு மேடையில் பேசுவார்கள். அதில் ஒன்றும் தவறும் இல்லை. ஆனால், அதை கூட செய்யாதவர் அஜித்தின் அப்பா.
சரி அவர் யார்? அவரின் பின்புலம் என்ன என தெரிந்து கொள்வோம். சுப்பிரமணி பாலக்காடு ஐயர் ஆவார். ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அருகிலுள்ள அலுவலகத்தில் குஜராத்தை சேர்ந்த மோகினி என்பவர் பணிபுரிந்தார். இருவருக்கும் பழக்கமாகி, காதலாகி திருமணத்தில் முடிந்தது.
அவர்களுக்கு பிறந்தவர்கள் மூன்று மகன்கள். மூத்தவர் அனுப் குமார், அடுத்து அஜித் குமார், அடுத்து அனில் குமார். அதாவது அஜித்துக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. அண்ணன் அனுப்குமார் மும்பையில் தொழில் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தம்பி அனில் குமார் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் பேராசிரியர். அப்பாவை போல அண்ணன், தம்பிகளும் ஊடக வெளிச்சமின்றியும், தன் சகோதரர் பற்றியும் எங்கும் காட்டி கொள்ளதவர்கள். அஜித்தின் அப்பா என அழைத்தால் கோபப்படுவார் சுப்பிரமணி. ஐ யாம் பாலக்காடு சுப்பிரமணி. அதுதான் என் அடையாளம் என நண்பர்களிடம் சொல்பவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என 5 மொழிகள் பேசுவார்.
அது என்னவோ, அவருக்கும் அஜித்துக்கும் இடையே சரியான உறவு இல்லை எனக்கூறப்படுகிறது. அதனால், அவர் அஜித்தின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. அதனால்தான் முக்கிய நிகழ்ச்சிகளில் அம்மாவை மட்டும்தான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வார் அஜித். தன் அப்பா பற்றி எங்கேயும் பேச மாட்டார். குடும்பத்தை விட்டு ஏழு வருடங்கள் பிரிந்தும் இருந்தார் சுப்பிரமணி.
அப்பா, அம்மாவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீடு கட்டிக்கொடுத்து கவனித்துக்கொண்டார் அஜித். இருவர்களையும் அக்கறையுடன் கவனித்து கொண்டவர் அஜித். அம்மா மோகினி வயது முதிர்வால் நினைவு தப்பி இருக்கிறார். அப்பாவும் கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார் எனக்கூறப்படுகிறது. 84 வயதில் மரணமடைந்துள்ளார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வமுள்ள அப்பாவை சொகுசு கப்பலில் தொடர்ந்து 6 மாதங்கள் இன்ப சுற்றுலாவுக்கு அஜித் அனுப்பி வைப்பாராம். தனியாக சென்று ஜாலியாக, உல்லாசமாக இருந்துவிட்டு வருவாராம் சுப்பிரமணி. வாழ்க்கையை அனுபவித்து மறைந்துள்ளார். தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் தன்னை ஒரு ஜாலி மனிதர் என அடிக்கடி சொல்லிக்கொள்வாராம் சுப்பிரமணி.
இந்த தகவல்களை சினிமா பத்திரிக்கையாளரும், அஜித்தின் அப்பாவுடன் பல வருடங்கள் பழகியவருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துகொண்டார். இருவருமே அருகருகே வசித்தவர்கள். காலை ஒன்றாக வாக்கிங் செய்வார்களாம். அப்போது தன்னை பற்றி பல விஷயங்களை அவரிடம் அஜித்தின் அப்பா பகிர்ந்து கொள்வாராம்.
அஜித்தின் அப்பா சுப்பிரமணியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!..