நாகேஷுக்கு நடிகராகும் வெறி எப்படி ஏற்பட்டது தெரியுமா?!.. இப்படி ஒரு கதை இருக்கா?!..
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களின் பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக நாகேஷ் இருப்பார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என அனைத்திலும் கலக்கியவர். நாகேஷ் அழுதால் அதை பார்க்கும் ரசிகர்களும் அழும்படி அவரின் நடிப்பு இருக்கும். ஒல்லியான தேகம், டைமிங் சென்ஸ், உடலை வளைத்து வளைத்து அவர் ஆடும் நடனம் ஆகியவை ரசிகர்களை கட்டிப்போட்டது.
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களே படத்தின் வெற்றிக்காக நாகேஷை தங்களின் படங்களில் நடிக்க வைத்தார்கள் என்றால் சொல்லவா வேண்டும். அதோடு, நாகேஷ் எங்கே தன்னை தாண்டி நடித்துவிடுவாரே என இருவருமே அலார்ட்டாக இருப்பார்கள்.
துவக்கத்தில் காமெடி வேடங்களில் நடித்தாலும் பாலச்சந்தர் போன்ற இயக்குனர்களால் எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ பெற்றார் நாகேஷ். அவரின் நடிப்பு திறமைக்கு எதிர் நீச்சல் ஒரு பெரிய உதாரணம் ஆகும். திருவிளையாடல் திரைப்படத்தில் நாகேஷ் ஏற்ற தருமி வேடம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் தனது பல திரைப்படங்களில் நாகேஷை நடிக்க வைத்தார். பல பேட்டிகளில் அவரின் நாகேஷின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார். நாகேஷ் சரியாக அங்கீகரிக்கப்படாத ஒரு கலைஞன் என பலரும் பேசியுள்ளனர்.
நடிப்பில் உச்சம் தொட்ட நாகேஷுக்கு நடிப்பு ஆசை எப்படி ஏற்பட்டது என்பதை தெரிந்துகொள்வோம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ரயில்வே துறையில் கணக்காளராக இருந்தார். ஒருமுறை சென்னை மாம்பழம் பகுதியில் ஒரு நாடகத்திற்கு ஒத்திகை பார்த்து வந்தனர். அதை நாகேஷ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு நடிகர் சரியாக நடிக்கவில்லை என அவருக்கு தோன்றியுள்ளது. உடனே அங்கு சென்று நடித்து காட்டினாராம். நாடகத்தின் இயக்குனரோ அவரை பாராட்டாமல் அவரை அவமதித்துள்ளார். இதையடுத்தே தானும் பெரிய நடிகராக வேண்டும் என்கிற ஆசை நாகேஷுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், அவருடன் பணிபுரியும் ஊழியர்களுடன் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்துள்ளார். வயித்துவலி வந்தவன் போல் நடிக்க வேண்டும் என்பதுதான் நாகேஷுக்கு கொடுக்கப்பட்ட வேடம். அந்த நாடகத்தை பார்க்க வந்த எம்.ஜி.ஆர் நாகேஷின் நடிப்பை மேடையில் பாராட்டி பேசினார். அதன்பின் பல நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் நாகேஷ்.