கொஞ்சம் விட்டிருந்தா டாப்-ல வந்திருப்பாங்க… பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன??
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை பொறுத்தவரை அவர்களின் குரல் வளம் மங்காத வரையில் அவர்கள் ஜொலித்துக்கொண்டே இருப்பார்கள். வயதானாலும் பல பாடகர்களில் குரல் இளமையாகவே இருக்கும். பாடகர்களை பொறுத்தவரை வயது ஒரு பொருட்டே கிடையாது.
ஆனால் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் இதயத்தை குளிர்வித்த குரல், திடீரென காணாமல் போவது என்பதை பலரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்று. அவ்வாறு தமிழ் இசை ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டு பின்னாளில் திடீரென மாயமாய் மறைந்த பாடகிதான் ஜென்சி.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜென்சி, தனது சிறு வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாடத்தொடங்கினார். அப்போது பிரபல பாடகர் ஜேசுதாஸுடன் இணைந்து பாடுவதற்கான வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களை ஜென்சி பாடியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஜேசுதாஸ் ஒரு முறை இளையராஜாவிடம் ஜென்சியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை பாடினார் ஜென்சி. குறிப்பாக “முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற “அடி பெண்ணே”, “ப்ரியா” படத்தில் இடம்பெற்ற “என்னுயிர் நீதானே”, “ஜானி” படத்தில் இடம்பெற்ற “என் வானிலே”, “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் இடம்பெற்ற “காதல் ஓவியம்” போன்ற காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களை உதாரணமாக கூறலாம்.
இளையராஜா இசையில் பல கிளாசிக் பாடல்களை பாடிய ஜென்சி, திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்ததாக கூறப்பட்டது. மேலும் கேரளாவில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினாராம் ஜென்சி.
ஜென்சி வளர்ந்து வந்த காலகட்டத்தில் “கேரளாவை விட்டு சென்னை வந்து செட்டில் ஆனால் மிகப்பெரிய பாடகியாக புகழ் பெறலாம்” என இளையராஜா கூறினாராம். ஆனால் ஜென்சியின் தந்தை சென்னைக்கு மாற்றலாவதற்கான ஒப்புதலை ஜென்சிக்கு தரவில்லையாம்.
மேலும் ஜானகி, பி.சுசிலா போன்ற முன்னணி பாடகிகள் இருக்கும்போது நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஜென்சி பாடுவதை நிறுத்திக்கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இதில் என்னவென்றால், தமிழ் நாட்டில் நம் குரலுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே ஜென்சிக்கு தெரியாதாம். அவர் பாடும் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படத்தை கூட அவர் பார்த்ததில்லையாம். 1980களில் கேரளாவில் தமிழ் திரைப்படங்களை அவ்வளவாக திரையிடும் வழக்கம் இல்லை என்பதுதான் இதற்கு காரணமாம். இவ்வாறு ஜென்சி பாடுவதை நிறுத்தியதற்கான காரணமாக பல கூறப்படுகிறது.
இது குறித்து தனது வீடியோவில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் “ஜென்சியின் பயணம் தடை பட்டதற்கு இவைகள்தான் காரணம் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஜென்சி ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களில் பாடுவதில்லை என்ற முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டபோது அவர் நிஜமாகவே அப்படி கூறினாரா இல்லையா என்பதை இங்குள்ள இசையமைப்பாளர்கள் கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கலாமே? அவரை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு அவர் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை. கேரளாவில் கொச்சி பகுதியில்தான் குடியிருந்தார்.
இதை எல்லாம் நினைத்துப்பார்க்கும்போதுதான் ஜென்சி தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய மர்மம் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த மர்மம் என்ன என்பதை அறியாதவராக ஜென்சியும் இருப்பதுதான் இதில் வேடிக்கை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.