இயக்குனர் ஷங்கர் தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் அவர் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்தவர் என்பதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள்.
இயக்குனர் ஷங்கர் “எஸ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அவர் இயக்கிய “முதல்வன்” திரைப்படத்தை தனது “எஸ் பிக்சர்ஸ்” நிறுவனத்தின் மூலமே தயாரித்திருந்தார். “முதல்வன்” திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.
“முதல்வன்” திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு “காதல்” திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், சந்தியா ஆகியோரின் நடிப்பில் வெளியான “காதல்” திரைப்படம் காலத்தை கடந்து நிற்கும் திரைப்படமாக மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, “வெயில்”, “கல்லூரி”, “அறை எண் 305-ல் கடவுள்”, “ஈரம்” போன்ற பல திரைப்படங்களை தனது எஸ்.பிக்சர்ஸ் பேன்னரின் கீழ் தயாரித்தார்.
அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தை தயாரிக்க தொடங்கினார். ஆனால் படப்பிடிப்பிற்கு வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்ற காரணத்தால் படப்பிடிப்பு அப்படியே நின்றுபோனது.
மேலும் வடிவேலுவால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வடிவேலு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வடிவேலு மீதான தடை விலக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இனி படத்தயாரிப்பில் ஈடுபடப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாக பல பேச்சுக்கள் கிளம்பின.
இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான “அநீதி” என்ற திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ஷங்கரின் “எஸ் பிக்சர்ஸ்” வழங்கும் “அநீதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்குள் ஷங்கர் எப்படி வந்தார் என்பது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மார்க்கெட்டை காப்பாத்தனும்ன்னா ஜீவா இதை பண்ணியே ஆகனும்!! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய டிப்ஸ்…
“ஷங்கர் கடைசியாக 24 ஆம் புலிகேசி திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த படம் நின்றுபோனது. அதற்கு முன் அவர் தயாரித்த சில படங்களில் ஷங்கருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த கடனை எல்லாம் ஷங்கர் தனது வீட்டை விற்று அடைத்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.
ஆதலால் ஷங்கர் இனிமேல் படத் தயாரிப்பில் இறங்க வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருந்தாராம். அப்போதுதான் வசந்தபாலன் தான் எடுத்திருந்த அநீதி திரைப்படத்தை ஷங்கருக்கு போட்டுக்காட்டினாராம். அநீதி திரைப்படத்தை தயாரித்தது வசந்தபாலன்தான். ஆனால் படத்தை வெளியிடமுடியவில்லை என ஷங்கரிடம் அவர் கூறியிருக்கிறார். அநீதி படத்தை பார்த்த ஷங்கருக்கு படம் பிடித்துப்போனதாம். உடனே ஷங்கர் தான் படத்தை வெளியிடுவதாக கூறிவிட்டாராம்” என்று அந்த வீடியோவில் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
“அநீதி” திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க அர்ஜூன் தாஸ், துசாரா விஜயன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். வசந்தபாலன் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் வசந்தபாலனும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…