“கருப்பா துருதுருன்னு ஒரு ஆள்”… சல்லடை போட்டு தேடிய பாலச்சந்தரின் உதவியாளர்… வந்தது யாரு? சூப்பர் ஸ்டாரு…
1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில்தான் ரஜினிகாந்த் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவர். ஆனால் அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்முதலாக ஒப்பந்தமானது எப்படி என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு நாள் கே.பாலச்சந்தர் தனது உதவியாளர் ராமுடு என்பவருடன் சென்னை தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அங்கே நடிப்பு பயிலும் பலரையும் கவனித்துக்கொண்டிருந்த பாலச்சந்தருக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கருப்பான இளைஞர் மிகவும் வசீகரமாக தெரிந்திருக்கிறார். அப்போதே அவரை தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என பாலச்சந்தர் முடிவுசெய்தாராம்.
அதன் பின் அங்கிருந்த மாணவர்கள் பலருடனும் கே.பாலச்சந்தர் கலந்துரையாடினாராம். அப்போது அந்த கருப்பு இளைஞர் பாலச்சந்தரிடம் ஒரு கேள்வி கேட்டாராம். அதாவது “ஒரு நடிகன் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும்?” என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு பாலச்சந்தர் “நிஜ வாழ்க்கையில் ஒரு நடிகன் எந்த காரணத்தை கொண்டும் நடிக்க கூடாது” என பதிலளித்தாராம்.
மாணவர்களுடனான கலந்துரையாடல் முடிந்த பிறகு கே.பாலச்சந்தர் அந்த இளைஞரை தனியாக அழைத்து “நாம் மீண்டும் சந்திப்போம்” என்று கூறினாராம்.
அதன் பின் சில நாட்களுக்குப் பிறகு பாலச்சந்தர் தனது உதவியாளர் ராமுடுவை அழைத்து, “பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் கருப்பான துருதுருவென இருக்கும் கன்னட இளைஞன் ஒருவனை பார்த்தோம், நியாபகம் இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு ராமுடு “ஞாபாகம் இல்லை” என கூறியிருக்கிறார்.
“அவனை தேடிக் கண்டுபிடித்து கூப்பிட்டு வா” என கூறினாராம் பாலச்சந்தர். உடனே ராமுடு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிற்குச் சென்று சல்லடை போட்டு தேடினாராம். அப்படிப்பட்ட ஒரு இளைஞர் அகப்படவே இல்லையாம். வெகு நேரம் தேடியப்பிறகு ஒரு வழியாக அந்த இளைஞரை கண்டுபிடித்தாராம் அவர்.
ராமுடு அந்த இளைஞரை பாலச்சந்தரிடம் அழைத்து வந்திருக்கிறார். பாலச்சந்தர் அவரை பார்த்து “உனக்கு தமிழ் தெரியுமா?” என கேட்டாராம். அதற்கு அவர் “இல்லை, எனக்கு தெரியாது” என பதிலளித்தாராம்.
“சரி, சீக்கிரம் கற்றுக்கொள். நான் ஒரு படம் இயக்கப்போகிறேன். அந்த படத்தில் உனக்கு வாய்ப்புத் தருகிறேன். சின்ன ரோல்தான். அடுத்த படத்தில் உனக்கு பெரிய ரோலாக தருகிறேன்” என கூறினாராம். அந்த இளைஞரும் ஆவலோடு சரி என ஒப்புக்கொண்டாராம்.
இதையும் படிங்க: 17 மணி நேரம் தொடர்ந்து சண்டை போட்ட கேப்டன்… அசந்துபோன தயாரிப்பாளர்… வேற லெவல் சம்பவம்…
‘உனது பெயர் என்ன?” என கேட்டதற்கு “சிவாஜி ராவ்” என பதிலளித்தாராம். உடனே பாலச்சந்தர் “ஏற்கனவே இங்கு ஒரு சிவாஜி கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறார். அதனால் உனது பெயரை நான் ரஜினிகாந்த் என்று மாற்றுகிறேன்” என கூறினாராம். இப்படித்தான் ரஜினிகாந்த்தை ஒப்பந்தம் செய்தாராம் கே.பாலச்சந்தர். அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு.