காதல் தோல்விக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கு! அப்படி வந்த படங்கள்

by Rohini |   ( Updated:2024-08-15 06:37:04  )
mohan (1)
X

mohan (1)

Tamil Movies: இன்பம் துன்பம் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாறி மாறி வருகிறதோ அதே போல் காதல் என்பதும் ஒரு அங்கமாக மாறி விட்டது. சிறுவயது காதல், பருவக்காதல், வயது முதிர்ந்த காதல் என காதல் வயதை பார்க்காமல் மனதை பார்த்து வருவது. அதிலும் சினிமாவில் காதலை விதவிதமாக காட்டி இருக்கிறார்கள். ஒருதலை காதல், மும்முனை காதல் என பல வகைகளில் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் விழுந்து விழுந்து ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்க அந்த காதல் தோல்வியில் முடிந்து வேறொரு நபர் தன் வாழ்க்கையில் வருவதும் காதலித்த நபரை விட கிடைத்த வாழ்க்கை சிறப்பாக அமைவது குறித்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒரு சில படங்களை மட்டும் இந்த செய்தியில் பார்க்க இருக்கின்றோம்.

மௌன ராகம்: 80கள் காலகட்டத்தில் வெளிவந்த இந்த படம் காலங்கடந்தும் நிற்கும் படமாக இருக்கின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் காலம் கடந்தும் காதலின் அருமையை பறைசாற்றும் படமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது. கார்த்திக்கும் ரேவதியும் உருகி உருகி காதலிக்க ஒரு கட்டத்தில் கார்த்தியை பிரியும் சூழ்நிலை ரேவதிக்கு ஏற்பட மோகனுடன் திருமணம் செய்து கொள்கிறார்,

திருமணத்திற்கு பிறகு மோகனை தன்னுடைய வாழ்க்கை துணைவனாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரேவதி இருக்க அதன் பிறகு மோகனின் சில நடவடிக்கைகள் ரேவதிக்கு பிடிக்க கடைசியில் மோகனும் ரேவதியும் ஒன்று சேர்வது தான் இந்த கதையின் முடிவாக அமையும்.

ராஜா ராணி: இதுவும் கிட்டத்தட்ட மௌன ராகம் படத்தின் கதையை போலே தான் இருக்கும். ஆனால் வெவ்வேறு இரு ஜோடிகள் காதலிக்க கடைசியில் வேறு வேறு ஜோடிகள் இணைவது மாதிரியான கதையில் இந்த படம் வெளியாகியிருக்கும். இதில் நயன்தாரா, ஆர்யா, ஜெய் ,நஸ்ரியா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

நயன்தாராவும் ஜெயும் ஒரு ஜோடியாகவும் ஆர்யா நஸ்ரியா இன்னொரு ஜோடியாகவும் இருக்க இதில் நஸ்ரியா இறந்து போக ஜெய் தன் அப்பாவின் சொல்லை மீறாதவராக நயன்தாராவை விட்டு விலக கடைசியில் நயன்தாராவும் ஆரியாவும் இணைவது தான் இந்த படத்தின் கதை.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் ஆர்யா இவர்களின் வாழ்க்கை சுமூகமாக இருக்கும் வகையில் படத்தை முடித்து இருப்பார் இயக்குனர் அட்லி.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் தபு, ஐஸ்வர்யா ராய், அஜித், மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில் மெயின் நடிகர்களாக தபு, ஐஸ்வர்யா ராய், அஜித் ,மம்முட்டி ஆகியோர் இருந்தாலும் முதலில் ஐஸ்வர்யா ராய் நடிகர் அப்பாஸை காதலித்து கொண்டிருப்பார் .

ஆனால் அப்பாஸ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஐஸ்வர்யா ராய் தனியாக தன் காதலை எண்ணி வருந்தி கொண்டிருப்பார். அதன் பிறகு மம்மூட்டியின் நடவடிக்கைகள் ஐஸ்வர்யா ராயை ஈர்க்க அவர் ஊனமுற்றவராக இருந்தாலும் தன்னை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் கடைசியில் மம்முட்டியை துணையாக ஏற்றுக் கொள்கிறார் ஐஸ்வர்யா ராய். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதுவும் அஜித் தபு இவர்களுக்கு இடையேயான சந்தன தென்றல் பாடல் எப்பொழுது கேட்டாலும் ரசிகர்களை கொள்ளை கொண்ட பாடலாகவே மாறி இருக்கிறது.

வாரணம் ஆயிரம்: கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, திவ்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் .அப்பா சூர்யாவுக்கு சிம்ரன் ஜோடியாக நடித்திருப்பார். மகன் சூர்யா ஒரு பெண்ணை உயிரை கொடுக்கும் அளவு காதலிப்பார். ஆனால் அந்தப் பெண் ஒரு கப்பல் விபத்தில் இறந்து போக அதனால் தன்னை மதுப்பழக்கத்திற்கு ஆளாக்கி கொள்வார். இதனிடையில் திவ்யா அவருடைய வாழ்க்கையில் வர இருவரும் ஒரு கட்டத்திற்கு பிறகு ஒன்று சேர்வார்கள்.

Next Story