அய்யயோ அது நாங்க இல்லீங்க..! அறிக்கை கொடுத்து அப்புரூவர் ஆகும் 'மெர்சல்' தயாரிப்பாளர்.!
மெர்சல் திரைப்படத்தை எடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் அதற்கடுத்து எந்த ஒரு பெரிய படத்தையும் எடுத்து மீண்டும் தங்களது பெயர் வெளியே தெரியும் படி எதுவும் தற்போது வரையில் செய்ய வில்லை. சில மாதங்களுக்கு முன்னர் முழுக்க அனிமேஷன் படம் ஒன்றை தயாரிப்பதாக அறிவித்த தேனாண்டாள் அதன் பிறகு ஒரு போஸ்டர் மட்டும் வெளியிட்டு ஒதுங்கிக்கொண்டது.
ஆனால், அவர்கள் தயாரிப்பதாக நீண்ட வருடமாக ஒரு சரித்திர படம் கிடப்பில் இருக்கிறது. இந்த படம் தயாரானால் அந்த படம் தயாரானதையே ஒரு சரித்திரமாக எடுத்துவிடலாம் போல, அந்தளவுக்கு இருக்கிறது சங்கமித்ராவின் திரைப்பட வரலாறு.
சங்கமித்ரா எனும் சரித்திர பிரமாண்ட திரைப்படம், சுந்தர்.சி இயக்க உள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளனர் என்கிற பேச்சு ஆரம்பமான போதே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. சிறிய பட்ஜெட் காமெடி படங்களை இயக்கி வரும் சுந்தர் சி அடுத்ததாக இவ்வளவு பெரிய பிரமாண்டத்தை இயக்க உள்ளாரா என கேள்விப்பட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஆனால், யார் கண் பட்டதோ அந்த படம் அறிவிப்போடு அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருக்கிறது. இந்த படத்திற்கான போதிய நிதி கிடைக்கவில்லை என கூறப்பட்டு வந்தது. தற்போது தேனாண்டாள் நிறுவனாமே ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, நாங்கள் யாரிடமும் நிதி கேட்கவில்லை. அப்படி, சங்கமித்ரா படத்திற்காக யாரேனும் நிதி கேட்டிருந்தால் அது நாங்கள் இல்லை. என்பது போல அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அப்போ உள்ளடியில் எதோ வேலை நடந்துள்ளது என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரி சங்கமித்திரா படம் டேக் ஆப் ஆகுமா ஆகாதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.