பழி உணர்ச்சி ஒருவனை ஆயுசுக்கும் நிம்மதியா இருக்க விடாதுடா...உலக உண்மையை எடுத்துரைத்த அற்புதமான படம்
2010ல் சிபு ஐசக் தயாரிக்க, சீனு ராமசாமியின் இயக்கத்தில் வந்த அற்புதமான படம் தென்மேற்கு பருவக்காற்று. தேனி மாவட்ட வட்டார வழக்குப் பாஷையுடன் படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அனைத்துமே கதைக்குப் பொருத்தமான பாத்திரப்படைப்புகள்.
இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை சரண்யா பொன்வண்ணனுக:கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
வீராயி என்ற விதவைப்பெண் தான் எப்படி விதவையாகினேன் என்பதை மகனுக்கு எடுத்துச் சொல்கிறாள். அவனது மகன் முருகன் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் கொதித்து எழுகிறாள்.
தன்னந்தனியாக இருந்து விவசாயம் செய்து, கல் உடைத்து என தனது மகனைக் காப்பாற்றுகிறாள். கடைசியில் தன் மகனுக்கு அந்தப் பெண்ணையே கட்டியும் வைக்கிறாள். இடையில் நடந்தது என்ன என்பதை சுவாரசியத்துடன் படத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி.
விஜய்சேதுபதிக்கு இது முதல் படம். என்றாலும் அவருடைய நடிப்பு முதல் படம் போல் இல்லை. அற்புதமாகவும் யதார்த்தமாகவும் உள்ளது. ஆடு மேய்ப்பவராக வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்து விடுகிறார்.
பேச்சியாக வரும் வசுந்தரா காஷ்யப் படத்தில் நம் இதயத்தை வருடுகிறார்.
தனது காதலை நாசூக்காக விஜய்சேதுபதிக்குச் சொல்லும்போது இல்லை என விஜய் சேதுபதிக்குப் நெஞ்சைத் தொடுகிறார். என்.ஆர்.ராகநந்தனின் இசையில் பாடல்கள் கதைக்கேற்ப அமைந்து ரசனையைத் தருகிறது. இடைச்செருகலாக பாடல் இல்லை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளுடன் நம்மை பயணிக்க வைத்துள்ளது இயக்குனரின் தேர்ந்த படைப்பாற்றலையேக் காட்டுகிறது. ஆத்தா அடிக்கையிலே, சின்ன சின்னக் காட்டுலே, கள்ளி கள்ளிச்செடி, கள்ளிக்காட்டில், நன்மைக்கும், ஏடி கள்ளச்சி...ஆகிய பாடல்கள் நம்மை தேனிக்கே அழைத்துச் செல்கிறது.
மொத்தத்தில் பழிவாங்குவதும் அந்த உணர்ச்சியுடனே அலைவதும் பிறர் பழிச்சொல்லுக்கு ஆளாவதும் ஒருவனது வாழ்க்கையை எந்த அளவுக்கு நிம்மதியில்லாமல் ஆக்கி விடுகிறது என்பதை வெகு யதார்த்தமாகவும், ஆழமாகப் புரியும் விதத்திலும் ஆணி அடித்தாற்போல் நச்சென்று சொல்லியிருக்கும் விதம் அருமை.
வீராயியாக வரும் சரண்யா பெயருக்கு ஏற்றாற்போல் நெஞ்சை நிமிர்த்தி படம் முழுவதும் வீரமாக வெற்றி நடைபோடுகிறார். சரண்யா தன் மகன் விஜய் சேதுபதிக்கு டேய்...பழி உணர்ச்சி ஒருவனை ஆயுசுக்கும் நிம்மதியா இருக்க விடாதுடா...என பொங்கி எழுந்து சொல்கையில் நமக்குள் எங்கோ முள்ளை வைத்துத் தைத்தாற்போன்ற உணர்வு ஏற்படுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பருவக்காற்று வீசுவதை நிறுத்தாது.