சொந்த ஊரே சொர்க்கம்.. சென்னைக்கு 'நோ' சொல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

by Giri |   ( Updated:2025-04-09 08:59:59  )
சொந்த ஊரே சொர்க்கம்.. சென்னைக்கு நோ சொல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!
X

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகம் காட்டியவர், அதன்பின் ஒரேயொரு படத்தில் மட்டுமே இயக்குநர் அவதாரம் எடுத்தார். தற்போது முழுநேர நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் சசிகுமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். பெரும்பாலும் கிராமத்து கதையம்சங்களை கொண்ட படங்களில் நடித்து வந்த சசிகுமார் ட்ரெண்டை மாற்றி புது ரூட்டில் பயணித்து வருகிறார்.

‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடர் என வித்தியாசமாக பயணிக்கத் தொடங்கியுள்ளார். இதேபோல், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகிறது. இதேபோல் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள சசிகுமார் குற்றப்பரம்பரை நாவலை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார்.

இவர் நடிகர் ஆனதன் பின்னணியில் பொருளாதார நெருக்கடிகள் முக்கிய காரணம், சில படங்களை தயாரித்து நஷ்டங்களை சந்தித்தவர் அதிலிருந்து மீள இயக்குநர் பொறுப்பை ஓரம்கட்டி விட்டு முழுநேர நடிகரானார். அந்த நேரத்தில் கொரோனா தாக்கமும் சேர்ந்துகொள்ள சென்னையை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான மதுரைக்கு குடிபெயர்ந்துள்ளார். அதன்பின் மீண்டும் சென்னை பக்கம் சசிகுமார் வரவேயில்லை. மொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார்.

இது ஏன் என்பதையும் சசிகுமாரே விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்த போது, மலையாள நடிகர்களின் வாழ்க்கையை கவனித்தேன். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து படப்பிடிப்புக்கு வருகிறார்கள், வேலை முடிந்ததும் மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிச் செயல் படுகிறார்கள். அங்கு விவசாயம், வியாபாரம், சமூக சேவை போன்ற வேறு பணிகளில் ஈடுபட்டு சாதாரணமாக வாழ்கிறார்கள். இது எனக்கு மிகவும் மனதுக்குப் பிடித்திருந்தது.

sasikumar
sasikumar

அதனால் நாமும் ஏன் சென்னையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என நினைத்து, கிராமத்தில் வாழத் தீர்மானித்தேன். சினிமா சம்பந்தமான யாரையும் இங்கே சந்திக்கிறதில்லை. ஷூட்டிங் இல்லாத போது விவசாயம் செய்து கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கிறேன். எங்கள் ஊரில் யாரும் என்னோடு செல்பி எடுக்க வருவதில்லை.

நான் ரோட்டில் நடந்து கடைக்குப் போகலாம், சைக்கிளில் பயணிக்கலாம். வீட்டுக்கு வெளியே நிற்கிறேன். மக்கள் என்னை மாமா, மச்சான்னு கூப்பிட்டுப் பேசுகிறார்கள். சினிமா நிரந்தரமில்லை. சினிமா பல ஆண்டுகள் தொடரும், ஆனால் அதில் நடிக்கும் நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சினிமாவிற்கு வரும் யாரும் நிரந்தரமில்லை. சினிமாவை ஒரு பெரிய விஷயமாக எண்ணி தலைகனம் கொள்ளாமல் இருக்க இந்த வாழ்க்கை உதவுகிறது. கிராமத்து மக்களும் என்னை ஒரு சாதாரண மனிதராகவே பார்க்கிறார்கள். இந்த அமைதியையும், கூட்டுக் குடும்பமாக இருப்பதையும் இழக்கக்கூடாது என நினைக்கிறேன்." எனக் கூறும் சசிகுமார் பிசியாக படங்களில் நடித்தாலும், மதுரையில் இருந்தே அனைத்து படப்பிடிப்புகளுக்கும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story