டி.எம்.எஸ்ஸிற்கு வாய்ப்பு கொடுக்க கூடாது... அடம் பிடித்த சிவாஜி.. சுவாரஸ்ய பின்னணி...

by Akhilan |   ( Updated:2022-09-28 06:28:38  )
டி.எம்.எஸ்ஸிற்கு வாய்ப்பு கொடுக்க கூடாது... அடம் பிடித்த சிவாஜி.. சுவாரஸ்ய பின்னணி...
X

தமிழ் சினிமாவில் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலுக்கென்று தனி அடையாளமே இருக்கிறது. பக்திப் பாடல்கள் தொடங்கி தத்துவப் பாடல்கள், காதல் என எல்லா சூழ்நிலைகளுக்குமானது அவரது குரல். அன்றைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என எல்லோருக்கும் பொருந்திப் போனது அந்தக் காந்தக் குரலோனின் குரல். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட டி.எம்.எஸ் சினிமாவில் முதல்முதலில் பாடியது எப்படி நடந்தது தெரியுமா?

டி.எம்.எஸ் மதுரையில் இருந்து சென்னை வந்திருந்த சமயம் அது. அறிமுகமான கிருஷ்ண விஜயம் படத்தில் 4 பாடல்களைப் பாடியிருந்தார். இதனால், தமிழ் உச்சரிப்பு தெள்ளத்தெளிவாக இருக்கும் பாடகர் என்று பாராட்டப்பட்டார். அப்படியான சூழ்நிலையில், அருணா பிலிம்ஸ் தயாரிப்பில் சிவாஜியை வைத்து தூக்குதூக்கி படம் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. படத்துக்கு ஜி.ராமநாதன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, 8 பாடல்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அப்போது முன்னணி பாடகராக இருந்த திருச்சி லோகநாதனை அணுகியிருக்கிறார்கள். அவர் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் என நான்காயிரம் ரூபாய் ஊதியம் கேட்டிருக்கிறார். ஆனால், அந்தத் தொகை பெரிதாக இருப்பதாகக் கருதிய தயாரிப்பு தரப்பு, சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி லோகநாதனிடம் கேட்டிருக்கிறார்கள். அவரோ, குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் மதுரையில் இருந்து சௌந்தரராஜன் என்கிற புதுப்பாடகர் வந்திருக்கிறார். அவரை வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்களேன் என்று லோகநாதன் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு, டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டு, எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் என சொல்லியிருக்கிறார்கள். கோயில் திருவிழாக்களில் பாடி காராச்சேவு, காபி, மிக்சரை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த, டி.எம்.எஸ் முதல் பெரிய வாய்ப்புக்கு உடனே ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால், பிரச்னை வேறு ரூபத்தில் வந்தது. இதைக் கேள்விப்பட்ட சிவாஜி, புது ஆட்களை எல்லாம் பாட வைக்குறீங்களா என அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

சிவாஜி

ஆனால், இவரது குரல் பொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் சமாதானம் சொல்லியிருக்கிறார். இதிலும் சிவாஜி சமாதானம் அடையாத நிலையில், குல தெய்வம் கள்ளழகரையும் மதுரை மீனாட்சியையும் வேண்டிகொண்டு, நான் பாடுகிறேன். கேட்டுப் பாருங்கள். நன்றாக இருந்தால் சரி; இல்லையென்றால் நானே விலகிக் கொள்கிறேன் என்று சொல்லி 3 பாடல்களை டி.எம்.எஸ் பாடியிருக்கிறார்.

அந்த 3 பாடல்களையும் கேட்ட சிவாஜி, ரொம்ப நல்லாயிருக்கு. நீங்களே பாடுங்க என்று கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் சிவாஜியின் கைகளைப் பிடித்து நன்றி சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ். அதன்பிறகு நடந்தவைகள் எல்லாம் வரலாறு. கூண்டுக்கிளி படத்தில் சிவாஜிக்காக இவர் பாடிய, 'கொஞ்சும் கிளியான பெண்ணே..’ பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு தரமான செய்கையை செய்த ஜெமினி கணேசன்.. அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??

உடனே இவரைக் கூப்பிட்டு தனது மலைக்கள்ளன் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் இவர் பாடிய, 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..’ பாடல் மிகப்பெரிய ஹிட். எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பிளே லிஸ்டில் இன்றுவரை தவறாமல் இடம்பிடித்த அந்தப் பாடல்தான் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல். அந்த வகையில் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடலைப் பாடியவர் என்கிற பெருமையை டி.எம்.சௌந்தர்ராஜன் பெற்றார்.

Next Story